முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தானே புயல் சேதங்கள் குறித்து வைகோ அறிக்கை

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.11 - தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூரில் விரைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் வீசிய தானே புயலால், கடலூர், விழுப்புரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. கடலூர் மாவட்டத்தில் நான் சுற்றுப்பயணம் செய்து, புயல் சேதங்களைப் பார்வையிட்டேன். சாகுபடி செய்யப்பட்டு இருந்த 2.38 இலட்சம் ஏக்கர் நெல், 75 ஆயிரம் ஏக்கர் கரும்பு, 85 ஆயிரம் ஏக்கர் முந்திரி, 25 ஆயிரம் ஏக்கர் பலா, 5 ஆயிரம் ஏக்கர் தென்னை, 10 ஆயிரம் ஏக்கர் மரவள்ளி, 750 ஏக்கர் கொய்யா மற்றும் தோட்டப்பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டன. வேரோடு பெயர்ந்து கிடக்கின்ற முந்திரி, பலா, தென்னை மரங்களை அப்புறப்படுத்தி அகற்றுவதற்கே, ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவாகும் நிலை உள்ளது. இன்றைய நிலையில் தங்கள் சொந்தச் செலவில் விவசாயிகள் இதனைச் செய்ய இயலாது.

எனவே, தமிழக அரசு முதலில் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைப் பயன்படுத்தி 100 நாள் வேலைத்திட்டத்தைக் கொண்டு, வேரோடு சாய்ந்த மரங்களை அரசின் செலவில் அப்புறப்படுத்துவதுடன், பொதுப்பணித்துறையின் பொக்லைன் இயந்திரங்கள், தனியார் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு சாய்ந்துவிட்ட மரங்களின் வேர்களை முழுமையாக வெட்டி அகற்றி நிலத்தைப் பழைய நிலைக்குத் திருத்த வேண்டும். இப்பணிகளை, பொங்கல் திருநாளுக்குள் விரைந்து முடிக்க வேண்டும். வனத்துறையின் தடை இல்லாச் சான்று உடனடியாகக் கிடைத்தால்தான், வெட்டப்பட்ட மரங்களை பிற மாவட்டங்களுக்கு விவசாயிகள், விற்பனைக்காகக் கொண்டுசெல்ல இயலும். புதிய மரக்கன்றுகள் நட்டு வளர்க்க, முந்திரி, பலா, கரும்பு, வாழை, கொய்யா ஆகியவற்றுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய், நெல் ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய், தென்னை மரம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்; மரவள்ளி, வேர்கடலை, உளுந்து மற்றும் தோட்டப் பயிர்களுக்கு ஏக்கருக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கிடவும், புதிய பம்புசெட்டுகள் போட ஏற்பாடு செய்வதுடன், அதற்குத் தேவைப்படும் மின் இணைப்புகளை எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக வழங்கிடவும், வருவாய் இன்றித் தவிக்கின்ற விவசாயக் குடும்பங்களுக்கு, அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு மாற்றுத் தொழில் ஏற்பாடுகளைச் செய்வதுடன், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கிடவும், குடும்ப அடையாள அட்டை இல்லாத குடும்பங்களுக்கும் அரசின் அனைத்து உதவிகளும் வழங்கிடவும், பாதுகாக்கப்பட்ட குடிநீnullர் கிடைத்திட சிறப்புக் கவனம் செலுத்திடவும், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால், பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்ற. போர்க்கால வேகத்தில் மின்சாரக் கட்டமைப்புகளை உருவாக்கி, மின்சார விநியோகத்தைச் சீரமைத்திடவும், புயல் பாதித்த பகுதிகளில், விவசாயிகளின் அனைத்து அரசுத்துறை வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி கடன்களைத் தள்ளுபடி செய்திடவும், கரும்பு ஆலைகள் பயிர்க்காப்பீட்டுக்கான பிரிமியம் தொகையை, கரும்பு விவசாயிகளிடம், வசூலிக்கின்றபோதிலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டுத் தொகையைச் சரியாக வழங்குவது இல்லை என்பதால், பயிர்க்காப்பீட்டுத் தொகை சரியாகக் கிடைக்கவும், மீனவர்களின் மீன்பிடிப்படகுகள், வலைகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டதால், முற்றிலும் சேதமடைந்த மீனவர்களின் படகுகளுக்கு ஒரு இலட்சம் ரூபாயும், ஓரளவு சேதமுற்ற படகுகளுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கிடவும், குடிசை வீடுகளை அகற்றி நிரந்தர காங்கிரீட் வீடுகள் கட்டித்தரவும், மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை அளிக்கவும், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ம.தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்