முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கறுப்புப்பண முதலைகள் பெயரை வெளியிடகூடாது

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன.10 -  கறுப்புப்பண முதலைகளின் பெயர்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது என்று வருமான வரித்துறையை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பல்லாயிரக் கணக்கான கோடி கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இந்த பணம் முழுவதையும் இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் இந்த கோரிக்கை இதுவரை செயல்படுத்தப்படாமல் இருக்கிறது.  கறுப்புப்பணம் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். ஆனால் சமூகத்தில் பெரிய மனிதர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் இதனை பல ஆண்டுகளாகச் செய்து வெளிநாட்டு வங்கிகளில் இந்த பணத்தை பதுக்கி வருகின்றனர். 

இந்நிலையில் வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய வங்கிக் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலை சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வங்கிகளில் இருந்து இந்தியா பெற்றுள்ளது. ஜெர்மனியில் உள்ள எல்.ஜி.டி. வங்கியில் ரகசிய கணக்கு வைத்துள்ளவர்களின் பெயர்களை வருமான வரித்துறையின் உயர் அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் பெற்றுள்ளது. மேலும் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான தகவல்களையும், ஆவணங்களையும் சி.பி.டி.டி. என்ற இந்த அமைப்பு பெற்றுள்ளது. ஆனால் இந்த பட்டியலை எந்த காரணம் கொண்டும் வெளியிடவே கூடாது என்பதில் இந்த அமைப்பு உறுதியாக உள்ளது.  ஒருவேளை இந்த பெயர் பட்டியல் வெளியாகிவிட்டால் வெளிநாடுகள் கறுப்புப்பண முதலைகளின் பெயர்களை வெளியிடுவதை நிறுத்திக்கொள்ளும் என்றும், மேற்கொண்டு எந்த தகவலையும் பகிர்ந்துகொள்ள முன்வராது என்றும் இந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த பட்டியல் கொச்சி, மும்பை, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத் இயக்குனரகம் உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் இந்த பெயர் பட்டியலை கேட்டு வருகின்றன. அப்படி கேட்கும் பட்சத்தில் அவர்களிடம் எழுத்துமூலம் உறுதிமொழி பெற்ற பின்னரே பட்டியலை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெயர் பட்டியலை வரி வசூலிப்பிற்காகவோ அல்லது வரி ஏய்ப்பு விசாரணைக்காகவோ மட்டுமே பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி பெற்ற பிறகே சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு இந்த பெயர் பட்டியலை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கறுப்பு பணத்தை பதுக்கியவர்களை கைது செய்யவோ, இவர்கள் பெயரை வெளியிடுவதோ கூடாது என்று உறுதியாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.  இந்த பட்டியலை பெற்ற அதிகாரியே இந்த பட்டியலை பாதுகாப்பதில் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பெயர் பட்டியலை கேட்டு வாங்கும் அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியிலும் வருமான வரித்துறை ஈடுபட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்