முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அருகே ரூ.3,500 கோடியில் தொழில் நகரியம்

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜன.11 - ஜப்பான் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து சென்னை அருகே ரூ.3,500 கோடி முதலீட்டில் ஒருங்கிணைந்த தொழில் நகரியம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் புரிந்துணர்வு உடன்பாடு நேற்று கையெழுத்தானது. சென்னை தலைமை செயலகத்தில் நேற்று ஜப்பான் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் யூகியோ எடானோ மற்றும் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த அசென்டாஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகி சாங் சியாக் சிங், துணைத் தலைவர் மிட்சு ஹிரோ நகாமா உட்பட பலர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். 

அப்போது மகாபலிபுரத்தில் ரூ.3,500 கோடியில் நகரியம் அமைக்க தமிழக முதல்வர் அமைத்த தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி மையத்தின் தலைவர் என்.சுந்தர வரதனும், ஜப்பான் நாட்டின் சார்பாக அந்நாட்டு தொழில் அமைச்சர் யூகியோ எடானோ ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டார். இதேபோல இதே திட்டத்திற்காக சிங்கப்பூர் நாட்டின் அசென்டாஸ் நிறுவனத்தின் தலைவர் சாங் சியாக்சிங்கும் மற்றும் டாக்டர் சுந்தரவரதன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் கையெழுத்திட்டனர். 

இந்நிகழ்ச்சியில் ஜப்பானிய தொழில் அமைச்சர் யுகியோ எடானோ பேசுகையில், தமிழகத்தில் தொழில்கள் தொடங்கவும், முதலீடுகளை முன்னிறுத்தவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வழிவகுக்க வேண்டும் என்றும், இதற்கு ஏற்ற வகையில் எண்ணூர் துறைமுகத்தை மேம்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை, பெங்களூரூ தொழில் முனையத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஜப்பான் உதவத் தயார் என்றும் கூறினார்.

இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், தொழில் அமைச்சர் குறிப்பிட்ட விஷயத்தில் தமிழக அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை- பெங்களூரூ தொழில் முனையத்தின் வளர்ச்சியை முதல் குறிக்கோளாக எடுக்கப்பட்டுள்ளது என்றும், வடக்கு துறைமுக விரிவாக்க சாலையை அமைக்க தமிழக நெடுஞ்சாலைத்துறை ஏற்கனவே நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், தமிழகத்திற்கும், ஜப்பானுக்கும் இடையே நீண்ட கால கலாச்சார, தொழில்நுட்ப, கலை- இலக்கிய நல்லுறவு உள்ளது. இச்சூழலில் இந்த புரிந்துணர்வு உடன்பாடு ஏற்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். எத்தகைய புதிய முயற்சிகளுக்கும் ஆக்கப்பூர்வமான செயலுக்கும் தமிழகம் எப்போதும் முன்னோடியாக இருக்கும். 6-ம் நூற்றாண்டு காலத்திலிருந்தே இந்த கலாச்சார பகிர்வு இருக்கிறது. 500 தமிழ் வார்த்தைகள் ஜப்பானிய மொழியில் உள்ளது. இத்தகைய பாரம்பரிய நல்லுறவை மேலும் அடுத்தக் கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்ல இந்த புரிந்துணர்வு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவில் ஜப்பான் 6 வது மிகப் பெரிய முதலீட்டாளராக உள்ளது. தன்னுடைய முதலீட்டுக்கு தமிழகத்தை பெரும் வாய்ப்பாக அது கருதுகிறது. மேலும் ஜப்பானிய தொழில் வர்த்தக குடும்பங்களான தோஷிபா, நிசான், மிட்சு பிஹூ, கோமாட்சு போன்ற நிறுவனங்கள் மட்டுமல்லாது 286 சிறிய, நடுத்தர ரக நிறுவனங்களும் தமிழகத்தில் செயல்படுகின்றன. இந்தியாவில் 35 சதவீத ஜப்பானிய நிறுவனங்கள் தமிழகத்தில் கால் பதித்துள்ளதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 

தற்போதுள்ள மற்றும் ஜப்பானிய தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எனது அரசு செய்யும். விரைவில் எனது அரசு புதிய தொழில் கொள்கைகளை அறிவிக்க உள்ளது. இந்தியாவில் உள்ள ஜப்பானிய தூதர் சைக்கியை சென்னையில் கடந்த செப்டம்பர் 8- தேதி நான் சந்தித்துப் பேசுகையில், சமூக, கலாச்சார, கல்வித் துறையில் விரிவான ஒத்துழைப்பை அளிக்க தமிழகம் தயாராக இருப்பதாக அறிவித்தேன். அதன்படி சமீபத்தில் கூட்டு செயல் குழுவை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த குழு ஏற்கனவே தனது அறிக்கையை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 

ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்காக மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.1,900 கோடி ஒதுக்கியுள்ளேன். இது ஜப்பானிய தொழில் திட்டத்திற்கும், வடக்கு துறைமுக வளர்ச்சி திட்டத்திற்கும் உதவிகரமாக அமையும். கூடவே சென்னை- பெங்களூரு தொழில் முனைய உள்கட்டமைப்பு வசதியை முன்னுரிமை அளித்து மத்திய, மாநில அரசுகளின் பணிகள் உள்ளன. இதற்காக மாஸ்டர் திட்டம் என்று தயாராகிறது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்