முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசுபதி பாண்டியன் கொலை: 3 பேரைப் பிடிக்க தனி படை

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

திண்டுக்கல், ஜன.12 - திண்டுக்கல்லில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் வெட்டி படுகொலை செய்யப்பட்டதையடுத்து பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. நகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் அலங்கார்தட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதி பாண்டியன்(54). இவர் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஆவார். இவரது வீடு திண்டுக்கல் அருகிலுள்ள நந்தவனப்பட்டியில் உள்ளது. இங்கு தனது தாயார் வேலம்மாள், மகள் சந்தனபிரியா(14), மகன் சந்தோஷ் ஆகியோருடன் வசித்து வந்தார். இவரது மனைவி ஜெசிந்தா பாண்டியன் கடந்த 2006ம் வருடம் ஏப்ரல் 6ம் தேதி தூத்தூக்குடி அருகே படுகொலை செய்யப்பட்டார். பசுபதி பாண்டியன் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் தனது வீட்டுமுன்புறம் அமர்ந்து செல்போன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென வந்த 3 பேர் கொண்ட மர்மக் கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் மாவட்ட எஸ்.பி. தலைமையில் போலீசார் நேரில் சென்று பிணத்தைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. மோப்ப நாய் ஊருக்கு அருகிலுள்ள கள்ளிப்பட்டி வரை சென்று விட்டு அங்கேயே நின்று விட்டது. இதனிடையே பசுபதி பாண்டியன் படுகொலை சம்பவம் காட்டுத்தீ போல் நகரெங்கும் பரவியது. வியாபாரிகளும், கடைக்காரர்களும் தங்களின் கடைகளை அடைத்து விட்டு அவசர அவசரமாக வீடு திரும்பினர். நகருக்குள் வந்து கொண்டிருந்த பேருந்துகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நிலக்கோட்டை அருகே பேருந்தின் மீது கல்வீசி தாக்கி கண்டக்டரிடம் பணப்பையைப் பறிக்க முயன்ற 2 பேரை டி.எஸ்.பி. புஷ்பம் தலைமையில் போலீசார் விரட்டி சென்று பிடித்து அவர்களை கைது செய்தனர். இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்ததுடன் டிரைவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

நேற்றுக்காலை 9 மணியளவில் பசுபதி பாண்டியன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் புடைசூழ ஆம்புலன்சில் இருந்து வாகனங்கள் பின்தொடர்ந்து வர அமைதி ஊர்வலம் நடைபெற்றது. முன்னே மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன், டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், காவல்துறையினர் பாதுகாப்புடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்றது. அங்குவிலாஸ் இறக்கம், சவரியார் பாளையம், தோமையார்புரம் வழியாக மதுரை நோக்கி சென்றது. வழியெங்கிலும் அவருக்கு பொதுமக்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். முருகன்பட்டி என்ற இடத்தில் சென்ற போது 5000க்கும் மேற்பட்டோர் கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி கோஷம் எழுப்பினர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். இச்சம்பவத்தால் திண்டுக்கல் நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பேருந்துகளும் இயங்காததால் நகரே வெறிச்சோடிக் காணப்பட்டது. 

 

கொன்றது கூலிப்படையா?

 

பசுபதி பாண்டியன் நந்தவனப்பட்டியில் உள்ள தனது வீட்டில் எப்போதும் ஆதரவாளர்கள் 15 பேர்களுடன் தான் இருப்பார். நேற்றுமுன்தினம் தேனியில் முல்லை பெரியாறு பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருந்து விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார். ஆதரவாளர்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டதால் அவர்களை சாப்பிட போக சொல்லி விட்டு போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அந்நேரம் மறைந்திருந்து சட்டை அணியாமல் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவர் மீது பாய்ந்தனர். அவர் சுதாரிப்பதற்குள் சரமாரியாக வெட்டி விட்டு ஓடி விட்டனர். உடலில 13 இடங்களில் வெட்டு இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு பல வழிகளில் எதிரிகள் இருப்பதால் கூலிப்படையை வைத்து இக்கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இக்கொலை தொடர்பாக மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ்ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்