முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் வாதம்

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

மதுரை,ஜன.12 - ஜல்லிக்கட்டு தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளையில் நடைபெற்றுவரும் வழக்கில் நேற்று வாதாடிய மத்திய அரசு வழக்கறிஞர், காளைகள் காட்சி பொருளல்ல. உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வரும் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று வாதாடினார். விலங்குகள் நலவாரிய உதவி செயலாளர் வினோத்குமார் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த ஜூலை மாதம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் வன விலங்குகளான சிங்கம், கரடி, புலி ஆகியவற்றுடன் காளை மாடுகளையும் சேர்த்துள்ளது. எனவே வன விலங்கு பாதுகாப்பு சட்டப்படி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது. மத்தய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவிப்புக்கு இது எதிரானது. எனவே கலெக்டர்களின் உத்தரவை ரத்து செய்து ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். தமிழக வீரவிளையாட்டு பேரவையை சேர்ந்த அம்பலத்தரசு என்பவர் மத்திய சுற்றுச்சூழல் துறையின் அறிவிப்பு ஆணையை ரத்து செய்து ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

     இந்த இரண்டு மனுக்களும் நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் வக்கீல் கோயல் ஆஜராகி வாதாடும் போது, காளைகள் காட்சி பொருட்கள் அல்ல. ஜல்லிக்கட்டு நடத்தினால் உயிரிழப்புக்கள் ஏற்படுகிறது. காளைகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார். மத்திய அரசு வக்கீல் ரவிச்சந்திரன் வாதிடுகையில் இது போன்ற 2 வழக்குகளிலும் உச்சநீதிமன்றம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. தமிழக சட்டசபையிலும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஆணைக்கு இவ்வளவு காலதாமதமாக இப்போது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க 2 வாரகாலம் அவகாசம்  வழங்கலாமா என்று கேட்டனர்.

   கூடுதல் அட்வட்கேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் வாதிடுகையில் பொங்கல் பண்டிகையை யொட்டி அலங்காநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம் என்றார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் நாளை (இன்று) மத்திய மற்றும் தமிழக அரசிடம் இருந்து இது தொடர்பாக பதில் கேட்டு கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் விசாரணையை நாளைக்கு (இன்று) ஒத்தி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்