முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்கீரன் கோபால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க உத்தரவு

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.13 - முதல்​அமைச்சர் ஜெயலலிதா பற்றிய அவதூறான செய்தி வெளியிட்டதற்கு அட்டைப்படத்தில் செய்தி வெளியிட்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நக்கீரன் கோபாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்த விபரம் வருமாறு:- கடந்த வாரம் வெளியான நக்கீரன் வார இதழில் முதல்வர் ஜெயலலிதா பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு செய்தி வெளியானது. இதனால் ஆவேசமடைந்த அ.தி.மு.க. தொண்டர்கள் வார இதழ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த வார இதழையும் எரித்து கைதாகினர். அவதூறு செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  

இதனிடையே முதல்வர் ஜெயலலிதா தன்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட வார இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால் மற்றும் இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:​ எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி செய்தி வெளியிட இருந்தால் அந்த செய்தியை பேக்ஸ் மூலம் எனக்கு அனுப்பி வைத்து, அதுபற்றி விளக்கம் கேட்ட பின்னரே பிரசுரிக்க வேண்டும் என்று 2006​ல் சென்னை ஐகோர்ட்டு நக்கீரன் பத்திரிகைக்கு உத்தரவிட்டுள்ளது.   இந்த கோர்ட்டு உத்தரவை மீறும் வகையில் நக்கீரன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது பொய்யானது. அவதூறானது என்று தெரிந்தே வேண்டும் என்று குற்ற உள்நோக்கத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரோ, நானோ வாழ்நாளில் ஒருபொழுதும் மாட்டுக்கறி சாப்பிட்டது இல்லை. அந்த செய்தியை வெளியிட்டதன் மூலம் நக்கீரன் பத்திரிகை கோர்ட்டு உத்தரவை அவமதித்துள்ளது. இந்த செய்தி என் நற்பெயருக்கு மட்டுமல்ல, எனது மதிப்பு மரியாதைக்கு களங்கத்தை உருவாக்கி எனது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் விதமாக அமைந்துள்ளது.   பிராமண சமுதாயத்தில் இருந்து வந்த தமிழக முதல்​ அமைச்சர் மாட்டுக்கறி உண்பவார? என்ற தவறான எண்ணத்தை இந்த செய்தி உருவாக்கி உள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள தனி மனித சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் விதத்தில் இந்த அவதூறு செய்தி உள்ளது. எனவே என்னைப் பற்றி செய்தி எழுத, வெளியிட, விற்பனை செய்ய நக்கீரன் பத்திரிகைக்கு தடை விதிக்க வேண்டும். கோர்ட்டு உத்தரவை மதிக்காமல் வேண்டும் என்றே அவமதித்ததற்காக நக்கீரன் கோபால், காமராஜ் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.   இந்த வழக்கு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நக்கீரன் தரப்பு வக்கீல் பி.டி. பெருமாள், முதல்வரைப் பற்றி வெளியான செய்தியை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும், அதற்கான மன்னிப்பு அறிவிப்பை பத்திரிகையின் முக்கிய பகுதியில் வெளியிடுவதாகவும் தெரிவித்தார். அதற்கு முதல்​அமைச்சர் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவதகிருஷ்ணன், முதல்வரைப் பற்றி நக்கீரன் பத்திரிகை முதல் பக்கத்தில் தான் செய்தி வெளியிட்டது. எனவே மன்னிப்பையும் முதல் பக்கத்தில்தான் வெளியிடவேண்டும் என்று வாதிட்டார்.  

 இதையடுத்து தலைமை நீதிபதி, இந்த மன்னிப்பை வரும் நக்கீரன் இதழில் முதல் பக்கத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு செய்தி வெளியிட வேண்டும் என்றார். உடனே நக்கீரன் தரப்பு வக்கீல், ஏற்கனவே வரும் இதழுக்கான அச்சடிக்கும் பணி முடிந்து விட்டது என்று தெரிவித்தார். அதற்கு தலைமை நீதிபதி, மின்சார இணைப்பு இல்லை என்றீர்கள். எப்படி அச்சடித்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு இருந்தாலும் அதை மாற்றி விட்டு, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதை முதல் பக்கத்தில் பிரசுரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.   முதல் ​ அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியிட்டது தொடர்பாக நக்கீரன் கோபால், காமராஜ் ஆகியோர் மீது ஜாம்பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதில் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று நக்கீரன் கோபால் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நக்கீரன் கோபாலுக்கு நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கினார். அவர் 4 வாரத்துக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜர் ஆக வேண்டும். ஒரு நபர் ஜாமீன் தொகை செலுத்தி முன் ஜாமீன் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்