முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5000 சிறப்பு பேருந்துகள்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜன.13 - பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து அனைத்து மாவட்டத் தலைநகர்களுக்கும் அரசு போக்கு வரத்துக் கழக சிறப்பு பேருந்துகளை இயக்கவும் அதே போல் பொங்கலுக்கு பின் பொதுமக்கள் சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பவும் இதே முறையில் பேருந்துகளை இயக்கவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் விடுமுறை காலத்தையொட்டி சென்னையில் சுற்றுலா பொருட்காட்சி, வண்டலூர், உயிரியல் பூங்கா போன்ற பல இடங்களுக்கும் செல்ல 5 ஆயிரம் மாநகர சிறப்பு பேருந்துகளை இயக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

பயிர் விளையக் காரணமாய் உள்ள பகலவனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையினை தங்கள் சொந்த ஊர்களில் உறவினர்களுடனும், நண்பர்களுடனும், தமிழ் மக்கள் கொண்டாடுவது வழக்கம்.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் பொலிவுடன் கொண்டாட தங்கள் பிறந்த ஊருக்கு எவ்வித சிரமமுமின்றி சென்று திரும்பும் வகையில், பொங்கல் திருநாளை ஒட்டி, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, 12 ஆம் தேதி அன்று 1,115 பேருந்துகளும், 13 ஆம் தேதி அன்று 1,965 பேருந்துகளும், 14ஆம் தேதி அன்று 1,965 பேருந்துகளும் மற்றும் 15 ஆம் தேதியன்று பயணிகளின் தேவைக்கேற்ப உரிய எண்ணிக்கையிலும் பேருந்துகளை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார். இதில், அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய பகுதிகளுக்கு சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து இம்மாதம் 12ஆம் தேதி அன்று 557 பேருந்துகளும், 13 ஆம் தேதி அன்று 1,257 பேருந்துகளும் மற்றும் 14 ஆம் தேதி அன்று 1,257 பேருந்துகள் உட்பட 5 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், பொங்கல் திருநாளை குடும்பத்தினருடன் குதூகுலமாக கொண்டாடி மீண்டும் பணி நிமித்தமாக ஊர் திரும்பிடும் பொது மக்களின் நலன் கருதி இதே அளவிலான பேருந்துகளை 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை இயக்கிடவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் சிரமமின்றி பயணம் செய்வதற்கு ஏதுவாக,  பொங்கல் பண்டிகையை ஒட்டி இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கும், உடனடி இணையதள வழி பதிவு திட்டத்தின் கீழ் பயணச்சீட்டு முன்பதிவு செய்திடும் வசதியையும் வழங்கிட  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது மட்டுமல்லாமல்,  பொங்கல் பண்டிகையையொட்டி, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலுள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண். 24794709​க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும்.

மேலும், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஜனவரி 14 முதல் 17 வரை சென்னை மற்றும் புறநகர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலா பொருட்காட்சி, அண்ணா சதுக்கம், காந்தி மண்டபம், வி.ஜி.பி., முட்டுக்காடு, கோவளம், எம்.ஜி.எம்., மாமல்லபுரம், வண்டலூர் உயிரியல் ங்கா, கிஷ்கிந்தா, குயின்ஸ் லாண்டு போன்ற பல்வேறு சுற்றுலா மையங்களுக்கு 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், மக்கள் எவ்வித சிரமமுமின்றி தங்கள் இல்லங்களுக்கு சென்று, பொங்கல் பண்டிகையை தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாட இயலும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்