முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடம்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜன.13 - வரும் கல்வி ஆண்டில் இருந்து தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு கட்டாயம் அளிக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆர்.டி.இ. எனப்படும் மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதற்கான கல்வி கட்டணத்தை பள்ளிகளுக்கு அரசு வழங்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், அதே சமயத்தில் அந்த கட்டணம் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கட்டணமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் அருகில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். மத்திய அரசின் இந்த சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த திட்டமிட்டது.

இதற்காக வரும் கல்வி ஆண்டில் இருந்தே(2012-13) தனியார் பள்ளிகள் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று  கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி முதல்வர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்ததது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இணை இயக்குனர் கருப்பசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

வருகிற கல்வி ஆண்டு(2012-13) முதற்கொண்டு  தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் இடமளிக்க வேண்டும். 25 சதவீத மாணவர்களை 1ம் வகுப்பில் சேர்க்க அனுமதிக்கவேண்டும். அரசின் இந்த உத்தரவை அனைத்து தனியார் பள்ளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று இணை இயக்குனர் கருப்பசாமி கூறினார். மேலும், அதற்கான சுற்றறிக்கையையும் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கினார். 

தமிழகத்தில் உள்ள எல்லா தனியார் பள்ளிகளும் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையின்போது இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதோடு சில பள்ளிகளில்10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான பாடங்களை இப்போதே  துவங்கிவிடுவதாக கூறப்படுவதாகவும், அப்படி எதுவும் முன்கூட்டியே நடத்தக்கூடாது எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்