முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்மாடி மீதான விசாரணை பிப். 1-ல் தொடக்கம்

சனிக்கிழமை, 14 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, ஜன.14 - காமன்வெல்த் விளையாட்டு ஏற்பாடுகளில் நிகழ்ந்த ஊழல் தொடர்பாக கல்மாடி உள்ளிட்டோர் மீதான விசாரணை பிப்ரவரி மாதம் 1 ம் தேதி தொடங்கவிருப்பதாக டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும் வழக்கு விசாரணை தொடர்பான முன் நடவடிக்கைகளை நடத்தவிருப்பதாக சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி தல்வந்த்சிங் தெரிவித்துள்ளார். அதன்படி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரையம் தினமும் காலை 10 மணிக்கு நீதிமன்றத்திற்கு அழைத்து வர நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்கு தொடர்பான ஆவணங்கள் குறித்து தங்கள் வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்துவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் வரும் 31 ம் தேதியுடன் முடிந்து குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை பிப்ரவரி 1 ம் தேதி முதல் தொடங்கும். 

இதற்கு ஏற்றவாறு உங்கள் வழக்கறிஞர்களை அமர்த்திக் கொள்ளுங்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குற்றம் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் அனைத்தையும் குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் பிரதி எடுத்து கொள்ளலாம். இதற்காக நகல் எடுக்கும் எந்திரங்களும் நீதிமன்றத்திலேயே இருக்கும் என்றும் நீதிபதி தெரிவித்தார். 

வழக்கு விசாரணையின் போது ஆவணங்களின் பிரதிகளை கேட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேவையில்லாத காலதாமதத்தை ஏற்படுத்த கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக காமன்வெல்த் விளையாட்டு ஒருங்கிணைப்பு குழு முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடி உட்பட 20 பேர் மீது கடந்த ஆண்டு மே மாதம் 20 ம் தேதி சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. பின்னர் கடந்த நவம்பரில் மேலும் சிலர் மீது இரு குற்றப்பத்திரிக்கைகளை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. 

முன்னதாக இந்தியாவில் கடந்த 2010 ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான சுரேஷ் கல்மாடி கடந்த ஏப்ரல் 25 ம் தேதி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் தொடர்ந்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்