முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்காவிற்கு கட்டுப்பாடு

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

லக்னோ, ஜன.20 - உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரியங்காவிற்கு காங்கிரஸ் மேலிடம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  நாட்டில் அதிக எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட உத்தரபிரதேச சட்டமன்றத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. இங்கு ஆளும் கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், நீண்ட காலத்திற்கு பிறகு இங்கு ஆட்சியை அமைத்தே தீருவோம் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சியும், மறுபடி ஒரு முறை முதல்வர் ஆகும் ஆசையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவும், பாரதிய ஜனதா கட்.சியும் இங்கு 4 முனை போட்டியில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் தேர்தல் பிரச்சார வியூகத்தை பொதுச் செயலாளர் ராகுல்காந்தி வகுத்து அதை பின்பற்றும்படி மாநில நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே அவர் இந்த மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டுவிட்டார். 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய ராகுலின் சகோதரி பிரியங்காவும் அதிரடியாக இறங்கியுள்ளார். ராகுல் விரும்பினால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடத் தயார் என்று அவர் சமீபத்தில் கூறியிருந்தார். ஆனால் அவர் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட மாட்டார் என்று தெரியவருகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்காவை அதிகமாக பயன்படுத்திக்கொள்ள ராகுல் விரும்பவில்லை. எனவே சில கட்டுப்பாடுகளுடன் பிரியங்கா தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது. மீடியாக்களுக்கு பேட்டி தரக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளன. கட்சிக்காரர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றால் அதனை மூடிய அறைக்குள்ளேயே செய்ய வேண்டும். அதன் விபரங்களை வெளியே தெரிவிக்க கூடாது. அமேதி மற்றும் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் அடங்கியுள்ள சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே பிரச்சாரம் செய்ய அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராகுலை முன்னிலைப்படுத்தவே இந்த கட்டுப்பாடுகள் என்று கூறப்படுகிறது. பிரியங்கா அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அவ்வாறு அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் காங்கிரஸ் மேலும் வலுப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்