பகுஜன் சமாஜ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காது உளவுத்துறை தகவல்

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஜன.- 23 - உத்தரபிரதேச தேர்தலில் ஆளும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மெஜாரிட்டி கிட்டாது என்று அம்மாநில உளவுத்துறை தெரிவித்துள்ளது.விரைவில் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தல்களில் உத்தரபிரதேச சட்டசபையும் ஒன்று. இம்மாநிலத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆளும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளிடையே ஆட்சியைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. இருந்தாலும் பிரதான போட்டி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையேதான் உள்ளது. யாதவா? மாயாவதியா? என்பதே தற்போது அங்கு கேள்விக்குறியாக உள்ளது. ஒரு கட்சி ஆட்சி அமைக்க அல்லது ஆட்சி அமைக்கும் கூட்டணிக்கு 202 இடங்கள் கிடைத்தே ஆக வேண்டும். ஆனால் இப்போது ஆட்சியில் இருக்கும் மாயாவதி கட்சிக்கு இந்தமுறை மெஜாரிட்டி கிடைக்காது என்று தெரியவந்துள்ளது. முதலமைச்சர் மாயாவதி மாநில உளவுத்துறை மூலம் கருத்துக்கணிப்பு நடத்தினார். அப்படி நடத்திய கருத்துக்கணிப்பில் மாயாவதி கட்சிக்கு 160 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2007 தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு இருந்த செல்வாக்கு தற்போது கணிசமாக சரிந்துள்ளது. கடந்த தேர்தலில் மாயாவதி ஆட்சிக்கு வர பக்கபலமாக இருந்த உயர் வகுப்பினர் ஆதரவு தற்போதும் இருந்தபோதிலும் முஸ்லிம்கள் ஓட்டுக்கள் பிரிவதால் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  முஸ்லிம்களுக்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்போம் என்று முலாயம்சிங் வாக்குறுதி அளித்துள்ளதால் இந்த சமுதாயத்தின் பெரும்பகுதி வாக்குகள் சமாஜ்வாடி கட்சிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி மேற்கு உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. காங்கிரஸ் கட்சி, ராஷ்ட்ரீய லோக்தல் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதால் இந்த முறை காங்கிரஸ் கூட்டணிக்கு சற்று கூடுதலான இடங்கள் கிடைக்கலாம். அதே சமயம் எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது. இவ்வாறு உளவுத்துறை கணித்துள்ளது. 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: