முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர்கள் நியமன விதிகள் குறித்து மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

மும்பை, ஜன.- 23 - கவர்னர்கள் நியமனத்திற்கான விதிமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மும்பை ஐகோர்ட்டில் கவர்னர்கள் நியமனம் குறித்து பிரபல வழக்கறிஞர் வி.பி.பாட்டீல் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்திய அரசியல் சாசனத்தின் 157 வது பிரிவின்படி தற்போது கவர்னர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். ஆனால் அந்த 157 வது விதியில் தெளிவாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதில் பாரபட்சம் இருப்பதாக தெரிகிறது. அரசியல் சாசனத்தின்படி நியமிக்கப்படும் இந்த கவர்னர் பதவியை வகிப்பவர், ஒரு அரசியல் நியமனதாரராக இருக்கக்கூடாது. ஆனால் தற்போது நியமிக்கப்படும் கவர்னர்கள் பெரும்பாலும் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்றும் அவர் தனது மனுவில் கூறியிருக்கிறார். அரசியல் சாசன விதி 157 ன் கீழ் கவர்னராக நியமிக்கப்படுபவர் ஒரு இந்திய பிரஜையாக இருக்க வேண்டும். மேலும் அவரது வயது குறைந்தபட்சம் 35 ஆவது இருக்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது நாட்டின் மொத்த ஜனத்தொகையில் பாதிப்பேர் இந்த தகுதிகளைப் பெற்றிருக்கிறார்கள். விரிவான விதிமுறைகள் இல்லாததால் கவர்னர் நியமனத்தில் பல குளறுபடிகள் இருக்கின்றன. கவர்னருக்கு பாதி அளவு நீதி அதிகாரங்களும் இருக்கின்றன. எனவே கவர்னராக நியமிக்கப்படுபவர் அரசியல் சாசனத்தைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். கவர்னருக்கான நியமன விதிகள் குறித்து விரிவான விதிமுறைகளை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் பாராளுமன்ற சபாநாயகர், பிரதமர் ஆகியோர் அடங்கிய குழு மூலம் வகுக்க வேண்டும். இதுபோன்ற விதிமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்