சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கங்குலி ஓய்வு பெறுகிறார்

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன. - 23 - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளில் ஒருவரான ஏ.கே.கங்குலி விரைவில் ஓய்வு பெறுகிறார். 2 ஜி. வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற பெஞ்ச்சில் இடம்பெற்றுள்ள நீதிபதிகளில் ஒருவரான ஏ.கே.கங்குலி வரும் பிப்ரவரி மாதம் 2 ம் தேதி ஓய்வுபெறுகிறார். 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான மூன்று வழக்குகளை நீதிபதி ஏ.கே.கங்குலி, ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த பெஞ்ச் முன்பு முன்னாள் தி.மு.க. மத்திய அமைச்சர் ஆ.ராசா தமது பதவிக்காலத்தின்போது தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கிய 122 லைசென்ஸ்களை ரத்து செய்ய வேண்டுமா, இல்லையா என்ற முக்கிய வழக்கு நிலுவையில் உள்ளது. இதேபோல சி.பி.ஐ. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை பாரபட்சமின்றி விசாரிக்காது என்ற சந்தேகத்தினால் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட 2 வது முக்கிய வழக்கையும் இந்த பெஞ்ச்தான் விசாரிக்கிறது. அதேபோல ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் 2 ஜி. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விலை நிர்ணயிக்கப்பட்டதில் பங்கு உண்டு, அதனால் அவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று தாக்கல் செய்த மனு மீதான வழக்கையும் இந்த பெஞ்ச்தான் விசாரித்து வருகிறது. மேற்படி 3 வழக்குகளிலும் வாதங்கள் முடிந்துவிட்டன. தீர்ப்புக்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நீதிபதி ஏ.கே.கங்குலி ஓய்வு பெறவுள்ளது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.  புதிய நீதிபதி நியமிக்கப்படும்போது அவர் ஆரம்பத்தில் இருந்து  இந்த வழக்குகளை விசாரிக்கும் நிலை ஏற்படக்கூடும்.  அப்படி நேர்ந்தால் இந்த வழக்குகள் முடிவடைய மேலும் கால தாமதம் ஆகும். எனவே இந்த வழக்குகளின் தீர்ப்பை பிப்ரவரி 2 ம் தேதிக்குள் நீதிபதி கங்குலி தலைமையிலான பெஞ்ச்  வழங்குமா அல்லது தீர்ப்பு தள்ளிப்போகுமா என்ற  எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்: