முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தக்கடலில் நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

ராமேஸ்வரம், ஜன.- 23 - தை அமாவாசையை ஒட்டி ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தக்கடலில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். உலகப் பிரசித்திபெற்ற புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்தில் தை அமாவாசையை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள அக்னிதீர்த்த கடலில் புனித நீராடினர். அவர்கள் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடிய பின்னர் ராமநாத சுவாமியை வழிபட்டனர். கடற்கரையில் பலர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை 2 மணிக்கே நடைதிறக்கப்பட்டது. காலை 4 முதல் 5 மணிவரை ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். காலை 6.30 மணியளவில் தங்க ரிஷப வாகனத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளும், தங்க கருட வாகனத்தில் பூதேவியுடன் மகாவிஷ்ணுவும்  பஞ்சமூர்த்திகளுடன் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். அப்போது தீர்த்தவாரி நடைபெற்றது. நேற்று மதியம் தை அமாவாசையை முன்னிட்டு நடை சார்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றிரவு 7 மணிக்கு சுவாமி வீதியுலா நடைபெற்றது.  தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனம், மேலாளர் சுகாரின் உத்தரவின்பேரில் கோயில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். ராமேஸ்வரம் டி.எஸ்.பி. மணிவண்ணன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் பஸ்களும் இயக்கப்பட்டது. தை அமாவாசை தினமான நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக திருப்புல்லாணி சேதுக்கரையிலும், விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு அருகில் உள்ள  சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலிலும் ஏராளமான மக்கள் சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பல பகுதிகளிலும் ஏராளமானோர் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்