முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டி 347 ரன்களில் ராஜஸ்தான் முன்னிலை

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

சென்னை, ஜன. - 23 - ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியின் 4வது நாளான நேற்றைய ஆட்டத்தின் முடிவில் ராஜஸ்தான் அணி 347 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த அணி 2வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்களை எடுத்து வலுவான நிலையை எட்டியுள்ளது.
தமிழகம் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 621 ரன்கள் குவித்தது. இதனைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய தமிழக அணி துவக்கத்திலேயே மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. 3வது நாள் ஆட்டத்தின் முடிவில் தமிழக அணி 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 66 ரன்களை எடுத்தது. தினேஷ் கார்த்திக் 13 ரன்களுடனும், கே.வாசுதேவதாஸ் 25 ரன்களுடனும் விளையாடிக்கொண்டிருந்தனர். 4வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 295 ரன்களுக்குள் சுருண்டது. நேற்றைய ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களில் வாசுதேவதாஸ் மேற்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் பரிதாபமாக வெளியேறினார்.  அடுத்து தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்த  பிரசன்னா ஓரளவு ரன் சேர்த்து 44 ரன்களுக்கு உயர்ந்தபோது அவுட்டானார். பின்னர் வந்தவர்களில் சன்னி குப்தா 6 ரன்களிலும், யோ மகேஷ் ரன் ஏதும் எடுக்காமலும், கெளஷிக் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தினேஷ் கார்த்திக் மிக அபாரமாக விளையாடி 150 ரன்களை குவித்து தந்து தமிழக அணியின் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்தினார். கேப்டன் பாலாஜி 25 ரன்கள் சேர்த்துத்தந்தார்.
முடிவில் தமிழக அணி 102.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்களை மட்டுமே எடுத்தது. முதல் இன்னிங்சில் 326 ரன்கள் கூடுதலாக பெற்றிருந்த நிலையில் ராஜஸ்தான் அணி தனது 2வது இன்னிங்ஸ் ஆட்டத்தை துவங்கியது. நேற்றைய (4வது நாள்) ஆட்டத்தின் முடிவில் ராஜஸ்தான் அணி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்தது. சோப்ரா, சக்சேனா ஆகியோர் தலா 10 ரன்கள் பெற்ற நிலையில் களத்தில் உள்ளனர்.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்