முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில அபகரிப்பு: முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் கைது

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

திருப்பூர்: நில அபகரிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், திருப்பூர் மாவட்ட திமுக செயலாளருமான வெள்ளக்கோவில் சுவாமிநாதன் இன்று காலை கைது செய்யப்பட்டார். நில அபகரிப்பு வழக்கில் கைதாகியுள்ள 4வது திமுக முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

திருப்பூர் அருகே உள்ள முத்தூரில் வசித்து வருகிறார் திமுக முன்னாள் அமைச்சரும், திருப்பூர் மாவட்ட திமுக செயலாளருமான வெள்ளக்கோவில் சுவாமிநாதன். அவர் கடந்த திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தார். திருப்பூர் அருகே உள்ள மூவனூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் சுவாமிநாதன் மீது நில மோசடி புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை முத்தூர் வீட்டுக்குப் போலீஸாரும், லஞ்ச ஒழிப்புப் போலீஸாரும் வந்தனர். அப்போது சுவாமிநாதன் தூங்கிக் கொண்டிருந்தார்.

 

கோபிநாத் புகார் குறித்து போலீஸார் சுவாமிநாதனை எழுப்பி விசாரித்தனர். பின்னர் அவரைக் கைது செய்வதாக கூறி திருப்பூருக்கு அழைத்துச் சென்றனர். அவர் மீது நில மோசடி, மிரட்டல் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்தது உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. நில அபகரிப்பு வழக்கில் கைதாகியுள்ள 4வது திமுக முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன். முன்னதாக முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், கே. பொன்முடி மற்றும் கே. என். நேரு ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யபப்ட்டனர். கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமிக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது.

 

முன்னாள் அமைச்சர்கள் மீது புகார்கள் வந்ததால் தான் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா ஓற்கனவே தெரிவித்துள்ளார். ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கைது நடவடிக்கை நடப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டி வருகிறார். ஒருவரை மிரட்டி அவரது நிலத்தை அடிமாட்டு விலைக்கு தனது குடும்பத்தாருக்கு வாங்கிக் கொடுத்ததற்காக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் உதயநிதி ஸ்டாலின் முன்ஜாமீன் பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.

 

மேலும் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வீடு, பஞ்சாலை, தியேட்டர்களிலும் சமீபத்தில் ரெய்டு நடந்தது. இருப்பினும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்