முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.2 லட்சமாக்க திட்டம்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன.24 - வருமான வரிவிலக்கு உச்சவரம்பை ரூ. 2 லட்சமாக்க நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மத்திய பட்ஜெட் வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் தாக்கல் செய்யப்படும். தற்போது 5 மாநில சட்டசபை தேர்தல்கள் பிப்ரவரியில் நடைபெற இருப்பதால் பட்ஜெட்டை மார்ச் மாதத்திற்கு தள்ளிவைத்து இருக்கிறார்கள். பட்ஜெட்டில் இம்முறை பல்வேறு வரி சீர்திருத்தங்களை செய்ய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று தெரிகிறது. தற்போது தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ஆண்களுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரமாகவும், பெண்களுக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரமாகவும் மூத்த குடிமகன்களுக்கு இந்த உச்சவரம்பு 2 லட்சத்து 50 ஆயிரமாகவும் உள்ளது. 

வருமான வரிவிலக்கு உச்சவரம்பை அதிகரிக்க வேண்டுமென்று பல்வேறு அமைப்புக்கள் சார்பில் கோரிக்கைகள் விடப்பட்டன. இதை ஏற்றுக்கொண்டுள்ள நிதி அமைச்சகம் வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அனேகமாக வருமான வரி விலக்கு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் ஒரே மாதிரியானவரிவிலக்கு உச்சவரம்பு இனி இருக்கும். மூத்த குடிமகன்களுக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பிலும் மாற்றம் செய்யப்படும் என்று நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார். கடந்த ஆண்டு வருமான வரி விலக்கு சலுகை பெறும் மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு 65 லிருந்து 60 ஆகக் குறைக்கப்பட்டது. இந்த திருத்தம் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு மிகுந்த பலனைக் கொடுத்தது. இதுபோன்ற சீர்திருத்தங்களை இந்தத் தடவையும் பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்