முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - மியான்மார் வெளியுறவு அமைச்சர்கள் இன்று பேச்சு

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன.24 - இந்திய மற்றும் மியான்மார் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இன்று டெல்லியில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து முக்கிய பேச்சு நடத்த உள்ளனர். இந்தியாவுக்கும் முன்பு பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மார் நாட்டிற்கும் இடையே நீண்டகால நட்புறவு இருந்துவருகிறது. மியான்மாரில் கடந்த பல வருடங்களாகவே ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. என்றாலும் மக்கள் ஆட்சியை மலரவைக்க சர்வதேச சமூகம் முயற்சி செய்து வருகிறது. 

இந்த நிலையில் மியான்மார் வெளியுறவுத்துறை அமைச்சர் வூனா மவுங் லிவின் நேற்று 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு உறவில் சமீபகாலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தரப்பினரும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மியான்மார் ஜனாதிபதி யூதான்ட் சீன்  இந்தியாவுக்கு வந்திருந்தார். இவரது வருகையைத் தொடர்ந்து இப்போது மியான்மார் வெளியுறவுத்துறை அமைச்சர் டெல்லி வந்துள்ளார். 

மியான்மார் நாட்டின் எல்லைப் பகுதியில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் பயிற்சி எடுத்துவருவதாக கூறப்படுகிறது. இதற்கு இடம் கொடுக்க கூடாது என்று மியான்மார் அரசை இந்தியா வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக இந்திய உள்துறை செயலாளர் தலைமையில் ஒரு பிரதிநிதிகள் குழு சமீபத்தில் மியான்மார் நாட்டிற்கு சென்று வந்தது. மியான்மார் நாட்டில் வருகிற மே மாதம் ஒரு முக்கிய உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வருமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மியான்மார் அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பிற்கு இணங்க பிரதமர் மன்மோகன் சிங் வருகிற மே மாதம் மியான்மார் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்