முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எழுத்தாளர் - படைப்புகளுக்கு நிதியுதவி உயர்வு

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜன.24 - ஏழ்மை நிலையிலுள்ள எழுத்தாளர்கள் ஏற்றம் பெறவும், தமிழ்மொழி வளர்ச்சிக்காக சிறந்த இலக்கிய நூல்கள் வெளியிட ஊக்கம் அளிக்கும் வகையிலும் தமிழக அரசு அளிக்கும் நிதி உதவித்தொகை ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலக மொழிகளுள் பழமையும், இலக்கிய இலக்கண வளமும் வாய்ந்த மொழி தமிழ் மொழி.  தமிழ் மொழியில் பல்வேறு இலக்கிய செறிவு நிறைந்த  நூல்கள் உள்ளன.  பல்வேறு இலக்கிய நூல்கள் நாள்தோறும் அச்சிடப்பட்டு வருகின்றன.

சிறந்த நூல்களை படைப்பவர்களுக்கு, தமிழ் மொழிவளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் நிதயுதவி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் 25,000 ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் பெறுபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர். தேர்ந்தெடுக்கப்படும் நூல்களுக்கு நிதியுதவியாக 25,000/-​​ரூபாய்  அல்லது எழுதுப்பொருள் அச்சகத் துறையின் மதிப்பீட்டுத் தொகையில் 60 விழுக்காடு, இதில் எது குறைவானதோ, அத்தொகை வழங்கப்படும். சிறந்த இலக்கிய நூல்கள் தமிழ் மொழியில் அதிக அளவில் வெளிவருவதை மேலும் ஊக்கப்படுத்தப்படவேண்டும்; ஏழ்மை நிலையில் உள்ள எழுத்தாளர்கள் ஏற்றம் பெறவேண்டும்; என்ற நோக்கத்தின் அடிப்படையில், நடைமுறையில் இந்நிதியுதவி திட்டத்திற்கான வருமான வரம்புத் தொகை மிகவும் குறைவாக இருப்பதையும், அச்சகத் துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றத்தினால், நூல்கள் அச்சிடுவதற்கான செலவினம் அதிகரித்துள்ளதையும், நூல்களுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி குறைவாக இருப்பதையும், பெருமளவு நூலாசிரியர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாத நிலை உள்ளதையும் கருத்தில் கொண்டு தமிழில் சிறந்த நூல்களுக்காக வழங்கப்படும் நிதியுதவியினை 25,000/-​ரூபாயிலிருந்து 50,000/-​ ரூபாயாக உயர்த்தவும், இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் வருமான வரம்பை 25,000/​ரூபாயிலிருந்து 50,000/-​ ரூபாயாக உயர்த்தவும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  மேற்கண்ட அரசின் நடவடிக்கைகளினால், ஏழ்மையில் உள்ள எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்பட்டு, அவர்களுடைய நூல்கள் பதிப்பிக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்