முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடிலெய்டு டெஸ்ட்: பாண்டிங் - கிளார்க் அபார சதம்

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

அடிலெய்டு, ஜன. 25 - இந்திய அணிக்கு எதிராக அடிலெய்டில் நடந்து வரும் 4-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸி. அணி முதல் நாளன்று முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டை இழந்து 335 ரன்னை குவித்துள்ளது. இந்தப் போட்டியில் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் கேப்டன் மைக்கேல் கிளார்க் இருவரும் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். இதனால் அந்த அணி தற்போது வலுவான நிலையில் உள்ளது. 

இந்தியாவின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களான ஜாஹிர்கான், இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரது பந்து வீச்சு எடுபடவில்லை. சுழற் பந்து வீச்சாளர் அஸ்வின் 2 விக்கெட் எடுத்து இருக்கிறார். 

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 4-வது மற்றும் 

கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று துவங்கியது. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி சார்பில், கோவன் மற்றும் வார்னர் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், முதல் இன்னிங்சில் 90 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 335 ரன்னை எடுத்து உள்ளது. பாண்டிங் 137 ரன்னுடனும் , கேப்டன் கிளார்க் 140 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 

கோவன் மற்றும் வார்னர் இருவரும் முன்னதாக ஆட்டத்தை துவக்கினர். இருவரும் இணைந்து மெதுவாக ஸ்கோரை நகர்த்தினர். ஆஸி. அணியின் ஸ்கோர் 26 -க்கு சென்றது. 

அப்போது ஒரு முனையில் ஆடிக் கொண்டிருந்த வார்னர் ஜாஹிர்கான் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யு. வாகி வெளியேறினார். அவர் 23 பந்துகளைச் சந்தித்து 8 ரன்னை எடுத்தார். 

இதனைத் தொடர்ந்து எஸ். மார்ஷ் களம் இறங்கினார். ஆனால் அவரும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அந்த அணியின் ஸ்கோர் 31 -க்கு சென்ற நிலையில் மார்ஷ் ஆட்டம் இழந்தார். அவர் 3 ரன் மட்டும் எடுத்தார். 

அடுத்ததாக முன்னாள் கேப்டன் பாண்டிங் களம் இறங்கினார். அவரும் கோவனும் இணைந்து நிதானமாக ஆடினர். இதனால் அந்த அணியின் ஸ்கோர் சிறிது சிறிதாக உயர்ந்தது. 

இதற்கிடையே ஆஸி. அணி 17.4 ஓவரில் 50 ரன்னை எட்டியது. 

அடுத்த சிறிது நேரத்தில் துவக்க வீரராக இறங்கிய கோவன் ஆட்டம் இழந்தார். அவர் அஸ்வின் வீசிய பந்தில் லக்ஷ்மணிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 63 பந்தைச் சந்தித்து 30 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரி அடக்கம். 

இதனைத் தொடர்ந்து கேப்டன் மைக்கேல் கிளார்க் பாண்டிங்குடன் இணைந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை வலுவான நிலைக்கு கொண்டு சென்றது. 

பாண்டிங் மற்றும் கிளார்க் ஜோடியை பிரிக்க கேப்டன் சேவாக் நிறைய யுக்திகளை கையாண்டார். ஆனால் ஒன்றும் பலன் தரவில்லை. இதனால் சேவாக் ஏமாற்றம் அடைந்தார். 

முன்னாள் கேப்டன் பாண்டிங் 254 பந்தை சந்தித்து 137 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 13 பவுண்டரி அடக்கம். 

கேப்டன் மைக்கேல் கிளார்க் 188 பந்துகளைச் சந்தித்து 140 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 19 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடக்கம். 

ரிக்கி பாண்டிங் 69 பந்தில் 50 ரன்னை எட்டினார். பின்பு 164 பந்தில் 100 ரன்னை எட்டினார். கேப்டன் கிளார்க் 69 பந்தில் 50 ரன்னை எட்டினார். பின்பு 133 பந்தில் 100 ரன்னைக் கடந்தார். 

ரிக்கி பாண்டிங் மற்றும் கேப்டன் கிளார்க் இருவரும் இணைந்து 4 -வது விக்கெட்டிற்கு 251 ரன்னை எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடியை பிரிக்க கேப்டன் சேவாக் 2-ம் நாளன்று புதிய வியூகத்துடன் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணி தரப்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஜாஹிர்கான் 62 ரன்னை விட்டுக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். சுழற் பந்து வீச்சாளர் அஸ்வின் 81 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்