ரூ.9 கோடியை தர மறுக்கிறார்: விஷால் மீது ராதிகா புகார்

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜன.25 - வெடி பட விநியோகம் தொடர்பாக ரூ. 9 கோடியை தர மறுக்கிறார் என தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் நடிகர் விஷால் மீது நடிகை ராதிகா புகார் கூறியுள்ளார்.  பிரபுதேவா இயக்கத்தில் விஷால் நடித்த வெடி படத்தை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரித்தார். இந்த படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த படத்தை விநியோகம் செய்யும் பொறுப்பை நடிகை ராதிகாவின் ராடான் நிறுவனம் ஏற்றிருந்தது. இதற்காக ரூ. 12 கோடி ராதிகாவுக்கு தருவதாக விஷால் தரலப்பில் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த தொகையில் ரூ. 9 கோடியை தற்போது தர மறுப்பதாக நடிகை ராதிகா விஷால் மீது குற்றம் சாட்டியுள்ளார். 

இது குறித்து நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் விஷால் மீது ராதிகா புகார் கூறியுள்ளார். அந்த மனுவில் படத்தை விநியோகம் செய்து கொடுக்கும் பணிகளை ராடான் நிறுவனம் செய்து கொடுத்தது. இதற்காக விஷால் ரூ. 12 கோடி தருவதாக ஒப்புக் கொண்டார். அந்த ஒப்புதலை கடிதமாகவும் எழுதி கொடுத்தார். படத்துக்கான சாட்டிலைட் உரிமை மூலம் ரூ. 3 கோடி கிடைத்தது. அந்த தொகை போக மீதமுள்ள ரூ. 9 கோடிக்கு கையெழுத்திட்டு காசோலை கொடுத்தார். அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது அது திரும்பி வந்து விட்டது. உடனே விஷாலை தொடர்பு கொண்டு பலமுறை பணத்தை கேட்ட போதும் அவர் தரவில்லை. எனவே விஷாலிடம் இருந்து ரூ. 9 கோடி பணத்தை வாங்கி தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விஷாலிடம் விசாரணை நடத்த நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் முடிவு செய்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்: