முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெருங்குடி வங்கி கொள்ளை: துப்பு கொடுத்தால் பரிசு

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன. 26 - சென்னையை அடுத்துள்ள பெருங்குடி ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கிக்கு போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக் கண்ணன், இணை கமிஷனர் சண்முக ராஜேஷ்வரன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.  வங்கி கேஷியர் ஆனந்தனை துப்பாக்கி முனையில் மிரட்டிய கொள்ளையர்கள், வாடிக்கையாளர்கள் 22 பேரை அறையில்ட்டி வைத்தனர். பின்னர் ரூ.18 லட்சம் பணத்தை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பிச் சென்றனர். சென்னை போலீசுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த கொள்ளை சம்பவத்தில் வட மாநில கொள்ளையர்கள் 4 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது. கொள்ளையர்களை பிடிக்க 10-​க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதுவரை 150 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் கொள்ளை தொடர்பாக எந்தவித துப்பும் துலங்காமல் உள்ளது. 

கொள்ளையர்களில் 2 பேர் கொள்ளையடிப்பதற்கு முன்பு வங்கிக்கு வந்து ஒத்திகை பார்த்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பல நாட்கள் திட்டமிட்டு வடமாநில வாலிபர்கள் இத்துணிகர கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர். வடமாநில வாலிபர்கள் பலர், சென்னையில் தங்கி இருந்து கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுடன் தொழிலாளிகள் போல தங்கியிருந்து கொள்ளையர்கள் பல நாட்கள் நோட்டமிட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

கேஷியர் ஆனந்த் மற்றும் வங்கிக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் கூறிய அங்க அடையாளங்களை வைத்து கொள்ளையர்கள் 2 பேரின் கம்ப்யூட்டர் படம் வரையப்பட்டுள்ளது. இதனை வைத்தும் போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.  வங்கிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக கட்டாயம் கேமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாங்க் ஆப் பரோடா வங்கியில் கேமிரா பொறுத்தப்படாமல் இருந்துள்ளது. இதுவும் கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இக்கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து அனைத்து வங்கிகளிலும் கட்டாயம் கேமிராக்களை பொருத்த வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.  இதற்கிடையே கொள்ளையர்கள் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். கொள்ளை பற்றி துப்பு துலக்குவதற்காக 24 மணி நேரமும் செயல்படும் செல்போன் எண் ஒன்றையும் போலீசார் அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக சென்னை போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கடந்த 23-​ந்தேதி துரைப்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பெருங்குடியில் பரோடா வங்கியில் நடந்த கொள்ளை தொடர்பாக துப்பு துலக்கப்பட்டு வருகிறது. கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்த தகவல்களை 9884203821 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். பொறுப்புள்ள காவல் அதிகாரி தகவலைப் பெற்றுக்கொள்வார். தகவல் அளிக்கும் நபர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். அவர்களின் பெயர், விலாசம் மற்றும் விவரம் ரகசியமாக வைக்கப்படும். பொதுமக்கள் இந்த வங்கி கொள்ளையில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் பற்றிய சிறு விபரங்களை கூட உடனடியாக தொலைபேசி எண்ணில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்