முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டுடன் சுமூக உறவையே கேரளம் விரும்புகிறது

சனிக்கிழமை, 28 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜன. 28 - முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் தமிழகத்துடன் சுமூக உறவு வைத்துக் கொள்ளவே கேரளம் விரும்புவதாக அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.  கேரள கவர்னர் எம்.ஓ.ஹெச். பரூக் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக புதுச்சேரி செல்லும் வழியில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போதும் 116 ஆண்டுகள் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவது பற்றியே அவர் வலியுறுத்தி கூறினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கு தண்ணீர் தருவதன் அவசியம் பற்றி கேரளா நன்றாகவே உணர்ந்திருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவதன் முக்கியத்துவத்தை நாங்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறோம். தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்கள் முழுக்க முழுக்க முல்லைப் பெரியாறு அணை நீரையே நம்பியிருக்கின்றன. இது எங்களுக்கும் நன்றாக தெரியும். எனவே எந்தவித ஆட்சேபனையும் இல்லாமல் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவோம். அதே நேரத்தில் அணையின் பாதுகாப்பு பற்றியும் கேரள மக்களின் பாதுகாப்பு பற்றியும்தான் எனது அரசு கவலைப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண இரு மாநில அரசுகளும் விவாதிக்க வேண்டும். அப்போதுதான் பிரச்சினை தீரும். தமிழ்நாட்டுடன் சுமூக உறவை வைத்துக் கொள்ளவே கேரளம் விரும்புகிறது. இவ்வாறு முதல்வர் உம்மன் சாண்டி கூறினார். 

ஆனாலும் இந்த பிரச்சினை தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் முடிவை கேரளம் ஏற்க தயாராகவே இல்லை. இந்த குழுவின் அறிக்கை பாதகமாக இருந்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம். சாதகமாக இருந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று கேரளம் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவையும் கேரளம் இதுவரை அமல்படுத்தவில்லை. புதிய அணை கட்டுவது பற்றியே அவர்கள் திரும்பத் திரும்ப பேசி வருகிறார்கள். இந்த பிரச்சினைக்கு எப்போதுதான் தீர்வு ஏற்படும் என்பதுதான் புரியவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்