முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலேகானி - ப. சிதம்பரம் மோதல் முடிவுக்கு வந்தது

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜன. 29 - ஆதார் அடையாள அட்டை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திற்கும், ஆதார் அடையாள அட்டை ஆணைய தலைவர் நந்தன் நிலேகானிக்கும் இடையே நிலவிய மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து மேலும் 40 கோடி பேரை ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்வதற்காக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் 2 விதமான அடையாள அட்டை வழங்கும் பணியும், அது தொடர்பான கணக்கெடுப்பு பணியும் நடந்து வருகின்றன. தேசிய மக்கள் தொகை பதிவகம் சார்பில், பன்முக தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொருவரிடமும் உடற்கூறுகள் உள்ளிட்ட 15 விதமான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. 

மற்றொன்று திட்ட கமிஷனின் ஏற்பாட்டில் ஆதார் அடையாள அட்டை வழங்க ஒவ்வொருவரிடமும் 5 விதமான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. ஆதார் அட்டை வழங்கும் பணியால் தேச பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருந்தார். இதற்கு திட்ட கமிஷன் ஆட்சேபணை தெரிவித்தது. இதனால் மத்திய உள்துறை அமைச்சகம் திட்ட கமிஷன் இடையே மோதல் நிலவியது. இதனால் ஆதார் அடையாள அட்டை தொடர்பான பணிகள் பாதிக்கப்பட்டன. 

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம், திட்ட கமிஷன் இடையிலான மோதலுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆதார் அடையாள அட்டை ஆணையம் தொடர்பான அமைச்சரவை கமிட்டி கூட்டத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. ஆதார் அடையாள அட்டை ஆணையத்தின் யோசனைக்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதாவது, 16 மாநிலங்களில் மேலும் 40 கோடி பேரை ஆதார் அடையாள அட்டைக்காக பதிவு செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக கூடுதலாக ரூ. 5 ஆயிரத்து 791 கோடியே 74 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், சுமார் 95 அல்லது 96 சதம் பயோமெட்ரிக் பதிவுகளை ஒரே அமைப்பு மேற்கொள்ளும் என்றும், பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான கவலைகளை யு.ஐ.டி.ஏ.ஐ. கவனத்தில் கொள்ளும் என்றும் தெரிவித்தார். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட பிறகு அது நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு எடுத்துசெல்லப்படும் என்றும் மசோதா ஒன்றும் கொண்டு வரப்படும் என்றும் சிதம்பரம் தெரிவித்தார். இநத முடிவுக்கு ஆதார் அடையாள அட்டை ஆணைய தலைவர் நந்தன் நிலேகானி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

ஆதார் அடையாள அட்டைக்காக தகவல் சேகரிக்கும் பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடையும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து ஆதார் - தேசிய அடையாள அட்டை வழங்குவதில் இருந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இதனிடையே மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு திட்டங்களையும் சுமூகமாக அமல்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை அமைச்சகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குழு இறுதி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்