முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் - உத்தரகாண்டில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

சண்டிகார், ஜன.- 31 - பஞ்சாப் - உத்தரகாண்ட் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த இரு மாநிலங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணைகளை சமீபத்தில் தேர்தல் கமிஷன் வெளியிட்டிருந்தது. இந்த 5 மாநில தேர்தலில் மணிப்பூரில் 60 சட்டமன்ற தேர்தல் ஏற்கனவே ஒரே கட்டமாக நடைபெற்றது. பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் சட்ட சபைகளுக்கு   நேற்று ஒரே கட்டமாக தேர்தல்கள் நடைபெற்றன. பஞ்சாப் மாநிலத்தில்  உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த  1078 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  பிரகாஷ்சிங் பாதல் தலைமையிலான சிரோன்மணி அகாலிதளம் - பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையேதான் கடுமையான போட்டி. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. காலையில் இருந்தே ஆண்களும் பெண்களுமாக நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.  தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 200 கம்பெனி துணை ராணுவப் படையும், பஞ்சாப் மாநில போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 19 ஆயிரத்து 841 ஓட்டுச் சாவடிகளில் வாக்குப்பதிவு சுதந்திரமாகவும் அமைதியாகவும் நடைபெற்றது.  பதட்டம் நிறைந்த  வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடந்து முடிந்தது. நேற்று மாலை நிலவரப்படி 65 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.   இதேபோல 70 சட்டசபை தொகுதிகளைக்கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று அதிகாலை முதலே ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததால் தேர்தல் அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. இம்மாநிலத்தில் 70 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகி இருந்தன. மற்ற மாநில தேர்தல்கள் அனைத்தும் முடிந்த பிறகு மார்ச் 6 ம் தேதி காலை வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. அன்று மாலைக்குள் முடிவுகள் அனைத்தும்  அறிவிக்கப்படும்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்