முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்து நாட்டில் கால்பந்து மைதானத்தில் கலவரம் -74 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

 

கெய்ரோ,பிப்.- 3 - எகிப்து நாட்டில் கால்பந்து மைதானத்தில் கலவரம் நடந்தது. இதில்  74 ரசிகர்கள் பலியானார். கால்பந்து விளையாட்டில் உலகின் மிகச் சிறந்த அணிகளில் எகிப்து நாட்டு கால்பந்து அணியும் ஒன்றாகும். அந்நாட்டில் ஏராளமான கால்பந்து கிளப்புகள் உள்ளன. நேற்றுமுன்தினம் எகிப்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள போர்ட் செட்நகரில் நடந்த பிரிமீயர்லீக் போட்டியில் அல்அலிகிளப் அணியும் அல் -மஸ்ரிகிளப் அணியும் மோதின. இதில் அல்அலி அணி எகிப்தில் உள்ள கிளப் அணிகளில்மிகவும் புகழ் பெற்ற, பலம் வாய்ந்த அணி என பெயர் பெற்றதாகும். போட்டியைக் காண ஸ்டேடியத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். எகிப்து நாட்டு தொலைக்காட்சியில் இந்த போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இரு அணிகளையும் ரசிகர்கள் ஆர வாரம் செய்து, உற்சாகப்படுத்திபடி இருந்தனர். போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட அல்அலி கிளப் அணி தோல்வி அடைந்தது. அல் -மஸ்ரி கிளப் அணி 3 -0 என்ற கோல் கணக்கில் அல் அலி அணியை வீழ்த்தியது. இதனால் அல் -மஸ்ரி கிளப் ரசிகர்கள் வெற்றி கோஷமிட்டு ஆரவாரம் செய்தபடி இருந்தனர். இதை அல் அலி கிளப் ரசிகர்கள் எதிர்த்தனர். இதனால் மைதானத்தில் திடீர் கலவரம் வெடித்தது. நடுவர் போட்டி முடிந்ததாக  இறுதியில் நீண்ட விசில் ஊதிய மறுவினாடியே அல் -மஸ்ரி ரசிகர்கள், மைதானத்துக்குள் நாலாபுறமும் இருந்து கூச்சலிட்டப்படி ஆவேசமாக புகுந்தனர். அல் அலி கிளப்பைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் ரசிகர்களை அவர்கள்  ஓடஓட விரட்டி தாக்கினார்கள். கற்களை வீசி எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர்.  கத்தி, கம்பு, பாட்டில் உள்பட கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து வந்து தாக்கினார்கள். ஸ்டேடியத்தின் ஒரு பகுதியில் தீ வைக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். என்றாலும் அல் -மஸ்ரி அணியை ஆதரிக்கும் ரசிகர்களை ஓடஓட விரட்டி கத்திக்குத்தில் ஈடுபட்டனர்.  ஸ்டேடியத்தில் மிக, மிக குறைவான போலீசாரே பாதுகாப்பில் இருந்தனர். இதனால் அவர்களால் கலவரத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. சுமார் 30 நிமிடம் இரு கிளப்வீரர்களும் ஒரு வரையொருவர் கத்தியால் குத்தி, ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விழுந்தனர். ராணுவம் வந்த பிறகே நிலைமை கட்டுக்குள் வந்தது.  கால்பந்து மைதானம் முழுக்க ஆங்காங்கே ரசிகர்கள் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர்.  74 ரசிகர்கள் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த உடல்களில் பெரும்பாலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்பந்து ரசிகர்கள் தாக்குதலில் காயம் அடைந்து உயிருக்குப்போராடியபடி கிடந்தனர்.  அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.  அவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

எனவே சாவு எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட இந்த கலவரத்தை தொலைக்காட்சியில் பார்த்த எகிப்துநாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். போர்ட்செட் நகரில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அந்த நகரில் நேற்று  அமைதி நிலவியது.

கலவரம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.  ரசிகர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மீதமுள்ள பிரிமீயர் லீக் போட்டிகள் அனைத்தையும் எகிப்து கால்பந்து கூட்டமைப்பு ஒத்திவைத்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்