முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது

சனிக்கிழமை, 19 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச் 19 - தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் (19-ம் தேதி- சனிக்கிழமை) 26-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. தேர்தல் விதிமுறைகள் கடந்த 1-ந் தேதி முதல் அமுலுக்கு வந்து விட்டன. 

தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷியும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமாரும் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி உள்ளனர். இதற்கிடையில் தேர்தல் விதிமுறைகள் மற்றும் தேர்தல் செலவுகளை கண்காணிப்பதற்காக சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று (19-ம் தேதி- சனிக்கிழமை) தொடங்குகிறது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டசபை பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 19-ம் தேதி (இன்று) முதல் 26-ம்தேதி வரை தொகுதி தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும். 20-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை பொது விடுமுறை என்பதால் அன்றைய தினம் வேட்பு மனுக்கள் பெற்றுக் கொள்ள மாட்டாது. வேட்புமனு பற்றிய அறிவிப்பினை சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரிகள் 19-ம் தேதி (இன்று) வெளியிடுவார்கள். இவ்வாறு பிரவீன் குமார் கூறியுள்ளார். 

சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு வசதியாக அனைத்து தொகுதிகளுக்கும் வேட்புமனுக்கள் முன்கூட்டியே அனுப்பப்பட்டு விட்டன. வேட்பு மனு தாக்கல் செய்ய வருவோருக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வரக் கூடாது, மனு தாக்கல் செய்யும் அறையில் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என்றால் பெயரை முன்மொழிய 10 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளரின் கல்வித் தகுதி, சொத்து விவரம், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த ஆவணங்களையும் இணைக்க வேண்டும். ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தப்படி தமிழகத்தில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 28-ம் தேதி நடைபெறும். அன்றைய தினம் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் 30-ம் தேதி ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்