முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா -ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதல் சச்சின் சாதனை படைப்பாரா?

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

மெல்போர்ன்,பிப். - 5  - ஆஸ்திரேலியாவில் இன்று துவங்க இருக்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் மைக்கேல் கிளார்க் தலைமையிலான அணிக்கு எதிராக விளையடி வருகிறது.  ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் ஆஸி. அணி 4- 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.  இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டி - 20 போட்டி நடந்தது. இதில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றதால் இந்தப் போட்டி 1- 1 என்ற கணக்கில் சமனாகியது.  இதற்கு அடுத்தபடியாக முத்தரப்பு ஒரு நாள் தொடர் போட்டிகள் நடக்க இருக்கிறது. இதில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய 3 அணிகள் மோதுகின்றன.  முத்தரப்பு ஒரு நாள் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மெல்போர்னில் இன்று மோதுகின்றன.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடர் தோல்வியைச் சந்தித்தது. பின்பு 2-வது டி - 20 போட்டியில் வெற்றி பெற்றது. டி - 20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய வீரர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.  டெஸ்ட் அணியில் இடம் பெற்ற மூத்த வீரர்கள் சரியாக ஆடாததால் இந்திய அணி மோசமான தோல்வியை அடைந்தது. ஆனால் ஒரு நாள் போட்டிக்கான அணியில் இளம் வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.  இதனால் இந்திய அணியின் ஆட்டம்  நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரெய்னா சமீபத்தில் ஒரு பேட்டி அளித்து இருந்தார்.   அந்தப் பேட்டியில் டி - 20 மற்றும் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் ஆட்டம் வித்தியாசமாக இருக்கும்  என்று குறிப்பிட்டு இருந்தார். அது போலவே இந்திய அணி 2-வது டி - 20 போட்டியில் நன்கு ஆடி வெற்றி பெற்றது.  இந்தப் போட்டியில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியின் ஆட்டம் சிறப்பாக அமைந்தது. இந்திய வீரர்கள் பேட்டிங் மற்றும் பெளலிங்கில் பிரகாசித்தனர்.  டெஸ்ட் தொடரில் சரியாக ஆடாத காம்பீர் டி - 20 போட்டியில் நன்கு ஆடி அரை சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். கோக்லி மற்றும் கேப்டன் தோனி இருவரும் அவருக்கு பக்கபலமாக ஆடினர்.  அதே போல பெளலிங்கில் பிரவீன் குமார், வினய் குமார் இருவரும் நன்கு பந்து வீசி அணியின் வெற்றிக்கு உதவினர். ஆல்ரவுண்டர் ஜடேஜா அவர்களுக்கு ஆதரவாக பந்து வீசினார். தவிர, இந்தப் போட்டியில் இந்திய அணியின் பீல்டிங்கும் நன்றாக அமைந்தது. 

எனவே முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர். 

சொந்த மண்ணில் நடைபெறுவதால் ஆஸ்திரேலிய அணிக்கு இது கூடுதல் பலமாகும். எனவே அந்த அணி கடும் சவாலை அளிக்கும். இலங்கை அணியும் ஒரு நாள் போட்டியில் சிறந்த அணியாகும். 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர வீரரான டெண்டுல்கர் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக ஆடவில்லை. அவர் இந்தத் தொடரில் நன்கு ஆடி சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் அளித்துள்ள ஒரு பேட்டியில் முத்தரப்பு தொடரில் கோப்பையை வெல்ல எங்களுக்கே அதிக வாய்ப்பு என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

ஒரு நாள் போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணி சிறந்த அணியாகும். இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் இடம் பெற்று  உள்ளனர். இந்திய வீரர்கள் முழுத் திறனுடன் ஆடும் பட்சத்தில் எந்த ஒரு அணியையும் இந்தியா வீழ்த்தும். 

இன்று துவங்க இருக்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் வெற்றிக்காக 3 அணிகளும் முழுவீச்சுடன் களம் இறங்கும். மொத்தத்தில் இந்தத் தொடர் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என்பது உறுதி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்