முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.- 5 - முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று நலத்திட்ட உதவிகள், ரத்ததானம்,மருத்துவ சிகிச்சை, சட்ட உதவி முகாம்கள் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் பிரிவு முடிவு செய்துள்ளது. அ.தி.மு.க. தலைமை நிலையத்தில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வழக்கறிஞர்கள் பிரிவின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதற்கு  எஸ். சேதுராமன் வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் தலைமை தாங்கினார்.  பி.எச். மனோஜ்பாண்டியன்  வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் முன்னிலை வகித்தார். எம்.எல். ஜெகன் வட சென்னை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் வரவேற்றார். அ. தமிழ்மகன் உசேன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்,   செ. செம்மலை அமைப்புச் செயலாளர்,   கே.கே. கலைமணி மீனவர் பிரிவுச் செயலாளர் கருத்துரை வழங்கினார்கள்.  தாமல் டி. கண்ணா தென் சென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் நன்றி கூறினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- முதல்வர் ஜெயலலிதாவின் 64​ஆவது பிறந்த நாளை கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பாக தமிழகம் முழுவதும் ஏழை, எளியோர்க்கு உதவுகின்ற ஈகைப் பெருநாளாகவும், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், அரசு மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு நல உதவிகள் வழங்குகின்ற நன்னாளாகவும், ரத்ததானம் மற்றும் மருத்துவ சிகிச்சை மற்றும் சட்ட உதவி முகாம்கள் உள்ளிட்டவற்றை நடத்தி, மக்களின் நல்வாழ்வு பேணுகின்ற நன்னாளாகவும், மரக் கன்றுகள் நட்டும், மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கியும் உதவுகின்ற உவகைத் திருநாளாகவும் இந்நாளை கொண்டாடிட இந்தக் கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.
விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் வழங்கியும், ஏழ்மை nullங்கிடவும், ஏழைகளை தாங்கிப் பிடித்திடவும் எண்ணில்லா நலத் திட்டங்களை அள்ளித் தந்தும், தமிழகத்தில் அறிவுசார் புரட்சியை உருவாக்கிடவும், உலகத் தரக் கல்வியை தமிழக மாணவர்களுக்கு தந்திடவும் கணினி முதல் காலணி வரை, கல்வி ஊக்கத் தொகை முதல் கணித உபகரணங்கள் வரை என அனைத்தையும் அள்ளித் தந்து, கலைமகளும் பாராட்டும் கல்விப் புரட்சிக்கு வித்திட்டும், இல்லாமை, கல்லாமை இரண்டும் போக்கிடும் இணையில்லா தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாட்சியை இந்த கூட்டம் போற்றி வணங்குகிறது. முல்லைப் பெரியாறு போன்றவற்றில் தமிழகத்தின் nullநீர் ஆதார உரிமைகளை நிலைநாட்டவும், கச்சத் தீவினை மீட்டெடுத்து, அலைகொண்ட கடல் மீது வலைகொண்டு வாழும் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கிட போராடி வரும் கடமை மிகு கழக அரசின் முதலமைச்சரும், கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை கழக வழக்கறிஞர் பிரிவு நெஞ்சாரப் பாராட்டி, நெகிழ்ந்து போற்றுகிறது.
 சமீபத்தில் தானே புயலால் பாதிப்புக்கு உள்ளான கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையிலான மீட்புப் பணிகளை களமிறக்கி, இந்தியாவிலேயே இதுவரையில் எந்த ஒரு அரசும் செய்திடாத அளவில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, சாலைகளை செப்பனிட்டு, மின் விநியோகத்தை சீரமைத்து, நிவாரண உதவிகளை வழங்கி நிகரில்லா சாதனை புரிந்ததோடு, அடித்த காற்றில் இழந்த கூரைகளை புத்தம் புதிய கான்கிரீட் வீடுகளாக கட்டித் தந்திட ஆயிரம் கோடி ரூபாயாக ஒதுக்கி, ஒரு லட்சம் வீடுகள் கட்டத் திட்டமிட்டிருக்கும் ஜெயலலிதாவை ஈகைப் பெருமுடிவை இக்கூட்டம் வணங்கி வரவேற்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் அபகரிக்கப்பட்ட நிலங்களை, ஆக்கிரமிக்கப்பட்ட உடமைகளை, பறிக்கப்பட்ட சொத்துக்களை, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது போலவே, கழகத்தின் ஆட்சி அமைந்ததும் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு, சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட அபகரிப்பு உடமைகளை மீட்டுத் தந்து, ஈடு இணையில்லா சாதனை படைத்திருக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்மைத் திடத்தையும், நெஞ்சுறுதியையும் இக்கூட்டம் நன்றியோடு போற்றி மகிழ்கிறது.
தன்னை மெய்வருத்தி உழைக்கும் தாயின் முயற்சியால், நடந்து முடிந்த தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் ஈடு இணையில்லா இமாலய வெற்றி, அதனைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புத் தேர்தலிலும் சரித்திரமும் வியக்கும் வண்ணம் பெரு வெற்றி என்று வெற்றி மேல் வெற்றிகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெற்றுத் தந்திருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாட்சிப் பெருமைகளை, நயமான திட்டங்களை, ஒளிவு மறைவில்லா ஒப்பற்ற நிர்வாகத்தின் பெருமைகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வண்ணம், கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றின் வாயிலாக கொண்டு செல்லும் பணியை கடமை உணர்வோடும், கண்ணும் கருத்தோடும் கழக வழக்கறிஞர்கள் அனைவரும் செவ்வனே செய்து முடித்திட உளமாற உறுதி ஏற்கிறோம் என்றும் இக்கூட்டம் ஏகமனதாக தீர்மானிக்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்