முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.முதல்வர் மாயாவதி மீது பிரியங்கா காந்தி தாக்கு

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

இனாவ்னா, பிப்.- 6 - உத்தர பிரதேச முதல்வர்  மாயாவதியை கடுமையாக தாக்கி பேசியுள்ள  பிரியங்கா காந்தி  மக்களுக்காக பாடுபடும் அரசாங்கம் வேண்டுமா? அல்லது கட்டிடங்களை கட்டி பல ஆயிரம் கோடி ரூபாயை  வீணாக்கும்  மாயாவதி அரசு  வேண்டுமா? என்பதை வாக்காளர்களே தீர்மானிக்கட்டும் என்று கூறியுள்ளார். உத்தர பிரதேசத்தில் வருகிற 8 ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 3 ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு  அரசியல் கட்சிகளின் தலைவர்களும்  சூறாவளி  பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி 5 நாள் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.  அமேதி  எம்.பி.தொகுதிக்கு உட்பட்ட இனாவ்னா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசினார். அப்போது அவர் கூறுகையில், உ.பி.முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதியை கடுமையாக விமர்சனம் செய்தார். மக்களை பற்றி சிந்திக்கும் மக்களுக்காக செயலாற்றும் ஒரு அரசு வேண்டுமா? அல்லது  மக்களை பற்றி சிந்திக்காத மக்களுக்காக செயலாற்றாத கட்டிடங்களை கட்டிக்கொண்டு பல ஆயிரம் கோடி  ரூபாய்களை வீணாக்கி வரும் மாயாவதியின் ஆட்சி வேண்டுமா? என்று அவர் வாக்காளர்களை பார்த்துக் கேட்டார். இந்த இரு அரசாங்கங்களில் எந்த  அரசாங்கம் வேண்டும் என்பதை வாக்காளர்கள் சிந்தித்து ஓட்டு  போட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தலைவர்களை நீங்கள்தான் (மக்கள்) உருவாக்குகிறீர்கள். அதே போல அரசாங்கத்தையும் நீங்கள்தான்  அமைக்கிறீர்கள். மக்களுக்காக பணியாற்றுவார்கள் என்றுதான் நீங்கள்  ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைக்கிறீர்கள்.  ஆனால்  இப்போதைய  உ.பி. அரசு மக்களுக்கு நன்மை செய்யவில்லை.  அந்த அரசு சுய நலத்திற்கான பணிகளை மட்டுமே செய்து வருகிறது என்றும், மக்கள் அதை புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கடந்த 22 ஆண்டுகளாக உ.பி.யில் அமைந்த  அரசுகள்  மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்றும்  ஆனால்  காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தினால் மக்களுக்கு தேவையான பணிகளை  காங்கிரஸ் அரசு  செய்யும் என்றும்  அவர் கூறினார்.
இந்த தேர்தலில்  காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவது உறுதி என்றும்  அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்