முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் முதல் போட்டியில் ஆஸி.வெற்றி

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2012      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன், பிப்.- 6 - ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள்  கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை எளிதில் வென்றது. ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் பேங்க் சீரிஸ் முத்தரப்பு ஒரு நாள் போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஒரு நாள் உலகச் சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் கலந்துகொண்டுள்ளன. இத்தொடரின் முதல் போட்டி நேற்று மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. மழையின் காரணமாக இந்த போட்டி 32 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆஸி. அணி புதுமுகங்களும் அனுபவ வீரர்களும் கொண்ட கலவையாக களமிறங்கியது. அந்த அணியில் மாத்யூ வாடே மற்றும் கிறிஸ்டியன் ஆகியோர் ஒரு நாள் போட்டியில் முதன்முதலாக களமிறங்கினர். இவர்களில் வாடே மற்றும் வார்னர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். துவக்கத்தில் இந்திய பந்துவீச்சு நன்றாக இருந்தது. குறிப்பாக வினய்குமார் சிறப்பாக பந்துவீசினார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஆஸி. அணி 15 ரன்கள் எடுத்திருந்தபோது 6 ரன்களை எடுத்திருந்த  வார்னர், வினய்குமார் பந்தில் கிளீன்போல்டானார். இதையடுத்து களமிறங்கிய ரிக்கி பாண்டிங்கும் 2 ரன்கள் எடுத்த நிலையில் வினய்குமாரின் பந்தில் ரெய்னாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது ஆஸ்திரேலிய அணி 19 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்ததாக கேப்டன் மைக்கேல் கிளார்க் தன் பங்கிற்கு 10 ரன்களை எடுத்து ரோகித் சர்மாவின் பந்தில் ராகுல்சர்மாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதனால்14.4 ஓவர்களில்  49 ரன்களுக்கு ஆஸி. அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து துவக்க ஆட்டக்காரர் வாடேயுடன்  மைக் ஹஸ்ஸி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ரன் எண்ணிக்கையை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய துவக்க வீரர் வாடே ஒருநாள் போட்டியில்  தனது கன்னி அரை சதத்தை நிறைவுசெய்தார். 23-வது ஓவரில் ஆஸி அணி 122 ரன்களை எடுத்திருந்தபோது ரோகித்சர்மாவின் பந்தில் வாடே 67 ரன்கள் எடுத்த நிலையில் கிளீன்போல்டானார். இவரை அடுத்து டேவிட் ஹஸ்ஸி களமிறங்கினார். இரண்டு ஹஸ்ஸிக்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆஸி.யின் ரன் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில் 32 பந்துகளில் 45 ரன்களை எடுத்திருந்த மைக் ஹஸ்ஸி, வினய்குமாரின் பந்தில் விராட் ஹோலியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரை அடுத்து டேவிட் ஹஸ்ஸியுடன் கிறிஸ்டியன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தது. 32 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களை எடுத்தது. டேவிட் ஹஸ்ஸி ஆட்டமிழக்காமல் 30 பந்துகளில் 61 ரன்களையும் கிறிஸ்டியன் 17 ரன்களையும் எடுத்திருந்தனர். வினய்குமார் 3 விக்கெட்டுகளையும், ரோகித்சர்மா, ராகுல் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.  217 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கரும் கவுதம் காம்பீரும் களமிறங்கினர். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் டெண்டுல்கர், ஸ்டார்க்கின் பந்தில் ரிக்கி பாண்டிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 2 மட்டுமே. அடுத்ததாக காம்பீரும் 5 ரன்கள் எடுத்த நிலையில் மெக்கேயின் பந்தில் விக்கெட் கீப்பர் வாடேயால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது இந்திய அணி 3.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 13 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்ததாக விராட் ஹோலியுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு ரன்களை சேர்த்தது. அணியின் எண்ணிக்கை 64 க்கு உயர்ந்தபோது 31 ரன்களை எடுத்திருந்த விராட் ஹோலி,  மெக்கேயின் பந்தில் கிளீன்போல்டானார். அடுத்து ரெய்னா களமிறங்கினார். மேலும் ஒரு ரன் சேர்ந்த நிலையில் ரோகித் சர்மாவும் மெக்கேயின் பந்தில் கீப்பர் வாடேயால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து அணியின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்தபோது 4 ரன்களை எடுத்திருந்த சுரேஷ் ரெய்னா, கிறிஸ்டியன் பந்தில் டேவிட் ஹஸ்ஸியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து தோனியுடன் ஜோடி சேர்ந்தார்  ரவீந்திர ஜடேஜா. இந்த ஜோடியும் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. 25 பந்துகளில் 19 ரன்களை எடுத்திருந்த ஜடேஜா, மெக்கேயின் பந்துவீச்சில் டேவிட் ஹஸ்ஸியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது இந்திய அணி 22.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து இறங்கிய அஸ்வின் தமது பங்கிற்கு 5 ரன்களை மட்டும் சேர்த்து ரன் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 120 ரன்களில் 7 வது விக்கெட்டையும் இழந்தது. அடுத்து  ராகுல் சர்மா 1 ரன் மட்டும் எடுத்து தோர்த்தியின் பந்தில் போல்டானார். இதனால் 123 வது ரன்னில் 8 வது விக்கெட்டும் பறிபோனது. அடுத்த சிறிது நேரத்தில்  29 ரன்களை எடுத்திருந்த  தோனியும் தோர்த்தியால் அவுட்டாக்கப்பட்டார். அப்போது இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதனையடுத்து குமாருடன், வினய்குமார் ஜோடி சேர்ந்தார். இவர்கள் அணியின் ஸ்கோரை 150 க்கு உயர்த்தினர். இந்நிலையில் 15 ரன்களை எடுத்திருந்த குமார், மெக்கேயின் பந்தில் ஹாரிஸால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதனால் இந்திய அணி 29.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது. வினய்குமார் ஆட்டமிழக்காமல் 12 ரன்களை எடுத்திருந்தார்.  இதனால் 65 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்த அணியின் மெக்கே 4 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் மற்றும் தோஹர்த்தி 2 விக்கெட்டுகளையும் கிறிஸ்டியன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் முறையாக சர்வதேச  ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய மேத்யூ வாடே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.  இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 புள்ளிகளை பெற்றுள்ளது.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago