மதுரை மாரியம்மன் கோவிலில் நாளை தெப்பத் திருவிழா

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, பிப். - 6 - தெப்பத் திருவிழாவிற்காக மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் தயார் நிலையில் உள்ளது. திருவிழாவிற்காக ரூ. 3 லட்சம் மதிப்பில் தெப்பம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சில மாதங்களாக மாரியம்மன் தெப்பக்குளத்தில் நீர் நிரப்பப்பட்டது. இதில் 33 அடி உயரம், 30 அடி அகலத்தில் புதிய தெப்பம் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் செல்வம் தலைமையில் தெப்பத்தை உருவாக்கி உள்ளனர். அதன் மேற்புறம் எண்கோண வடிவில் அமைக்கப்பட்டிருப்பது புதுமையானதாகும். நாளை காலை தெப்பத் திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இருந்து சுவாமி பிரியாவிடையுடன் தெப்பக்குளத்தை நோக்கி புறப்பாடாகின்றனர். அம்மன் சன்னதி, கீழமாசி வீதி, விளக்குத்தூண், காமராசர் சாலை வழியாக தெப்பக்குளம் வந்தடையும் சுவாமி, அம்மன் முக்தீஸ்வரர் கோயிலில் எழுந்தருள்கின்றனர்.  பின்னர் தெப்பத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி இருமுறை தெப்பத்தை சுற்றி வருகின்றனர். மாலையில் தெப்பத்தை சுவாமி, அம்மன் ஒருமுறை சுற்றி வருகின்றனர். பின்னர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை நோக்கி புறப்பாடாகின்றனர். சுவாமி அம்மன் திருக்கோயிலில் இருந்து புறப்பாடாகி மீண்டும் திருக்கோயில் வந்தடையும் வரை திருக்கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெப்பத் திருவிழாவை வெளிநாட்டவரும் பார்க்கும் வகையில் சுற்றுலாத் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். தெப்பத் திருவிழாவன்று போக்குவரத்தை மாற்றிடவும் மாநகர் போலீஸ் முடிவு செய்துள்ளது. விழா ஏற்பாடுகளை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ஜெயராமன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்: