இன்று தைப்பூசம்: பழனி விழாக்கோலம் பூண்டது

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

பழனி, பிப்.7 - பாதயாத்திரைக்கு புகழ் பெற்ற பழனி தைப்பூச திருவிழா கடந்த 1 ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. அன்றைய தினம் காலை 9.15 மணிக்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் தந்தப் பல்லக்கில் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு சிம்ம லக்னத்தில் முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு 8.30 மணியளவில் முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் மணக்கோலத்தில் வெள்ளித் தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் பக்தி பெருக்கில் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்று கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். 

இந்த விழாவில் கோயில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன், துணை ஆணையர் மங்கையற்கரசி, சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், கந்தவிலாஸ் செல்வகுமார், பிரசாத ஸ்டால் அரிகரமுத்து, காண்டிராக்டர் நேரு, முருகனடிமை பாலசுப்பிரமணியன், சித்தனாதன் சன்ஸ் தனசேகர், பழனிவேல், ரவி, பெரியநாயகி அம்மன் கல்வி அறக்கட்டளை தலைவர் சுந்தரம், எம்.எல்.ஏ. வேணுகோபாலு, நல்லம்மை பாலிடெக்னிக் பி.ஆர்.ஓ. பெரியசாமி, யூனியன் பெருந்தலைவர் ஏ.டி செல்லசாமி, தொகுதி செயலாளர் மகுடீஸ்வரன், நகர செயலாளர் பரதன், நகர்மன்ற துணை தலைவர் முருகானந்தம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

இன்று செவ்வாய்க்கிழமை தைப்பூசமாகும். காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் சண்முக நதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் மேஷ லக்னத்தில் முத்துக்குமார சுவாமி சமேத வள்ளி, தெய்வானை தேரில் எழுந்தருள்கிறார். மாலை 4.35 மணிக்கு நான்கு ரத வீதிகளில் திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன், துணை ஆணையர் மங்கையற்கரசி மற்றும் திருக்கோயில் ஊழியர்கள் சிறப்பாக செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: