முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் நாளை முதல் கட்ட தேர்தல்

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, பிப்.7 - உத்தரபிரதேச மாநிலத்தில் நாளை (8 ம் தேதி) முதல் கட்ட தேர்தல் நடப்பதையொட்டி இம்மாநிலத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தல் மொத்தம் 55 சட்டமன்ற தொகுதிகளில் நடக்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் 403 உறுப்பினர்களை கொண்ட மாநில சட்டசபைக்கு மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகின்றன. தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் கட்சி, பாரதீய ஜனதா கட்சி போன்ற பிரதான கட்சிகள் போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. 

முதல்வர் மாயாவதி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, சோனியாவின் மகள் பிரியங்கா போன்ற தலைவர்கள் உ.பியில் முகாமிட்டு பிரச்சார களத்தை கலக்கி வருகிறார்கள். இந்த நிலையில் இம்மாநிலத்தில் நாளை 8 ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. மொத்தம் 7 கட்டங்களாக இம்மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. 2 வது கட்ட தேர்தல் பிப்ரவரி 11 ம் தேதியும், 3 வது கட்ட தேர்தல் வரும் 15 ம் தேதியும், 4 வது கட்ட தேர்தல் வரும் 19 ம் தேதியும், 5 வது கட்ட தேர்தல் வரும் 23 ம் தேதியும், 6 வது கட்ட தேர்தல் வரும் 28 ம் தேதியும், இறுதிக்கட்ட தேர்தல்( 7 வது) மார்ச் 3 ம் தேதியும் நடக்கவுள்ளது. 

இந்த நிலையில் நாளை 8 ம் தேதி 55 சட்டமன்ற தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மாநில போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மத்திய துணை ராணுவப் படையை சேர்ந்த 680 கம்பெனி போலீசார் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் பொருட்டு இவர்கள் கொடி அணிவகுப்பும் நடத்தினர். ஏற்கனவே உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதை முன்னிட்டு அங்கு கணிசமான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே போல் இந்த மாநிலத்திலும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக உயர் போலீஸ் அதிகாரிகளும் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தீவிரவாத ஒழிப்பு படையினர், சிறப்பு அதிரடிப்படையினர் ஆகியோரும் குவிக்கப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தில் உள்ள உயர் தலைவர்களுக்கு தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் மூலம் அச்சுறுத்தல் இருப்பதால் இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கலவரம் ஏதும் நடந்து விடக்கூடாது என்ற அடிப்படையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பைசாபாத் உள்ளிட்ட பதட்டமான மாவட்டங்களில் அடங்கிய 55 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய ரிசர்வ் போலீசார், இந்திய - திபெத் எல்லை போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர், அரியானா ஆயுத போலீஸ் படையினர், மத்திய பிரதேச ஆயுத படையினர் ஆகியோரும் குவிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் தேர்தல் அமைதியாக நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது. வாக்குப் பதிவு எந்திரங்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் மார்ச் 6 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதுவரையிலும் வாக்கு பதிவு எந்திரங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும்.  

இந்நிலையில் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி நேற்று முறைப்படி தொடங்கியது.  மாநில கவர்னர் ஜோஷி, முறைப்படி அதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.  இந்த இறுதிக்கட்ட தேர்தல் 60 சட்டமன்ற தொகுதிகளில் நடக்கிறது. மொராதாபாத், ரேபரேலி, லக்னோ டிவிசன்களில் உள்ள 10 மாவட்டங்களில் இந்த இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. மொத்தம் 1.8 கோடி வாக்காளர்கள் இறுதிக்கட்ட தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதற்காக 17 ஆயிரத்து 640 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 19 ஆயிரத்து 404 மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த இறுதிக்கட்ட தேர்தலுக்கான மனுக்களை வேட்பாளர்கள் 16 ம் தேதி வரை வாபஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இம்மாநிலத்தில் 55 தொகுதிகளில் நாளை 8 ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கான பிரச்சாரம் நேற்றோடு முடிவுக்கு வந்தது. நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.  உத்தர பிரதேச மாநிலத்தில் தேர்தலை முன்னிட்டு எந்த இடத்திலும் கட்சி கொடிகளோ, போஸ்டர்களோ, பேனர்களோ காணப்படவில்லை. காரணம், தேர்தல் கமிஷனின் விதிமுறைகள் அப்படி. தேர்தல் கமிஷனின் மேற்பார்வையில் இந்த தேர்தல் நடக்கிறது. இருந்தாலும் கூட, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, அவர்களுக்கு மதுபானம் கொடுப்பது போன்ற புகார்கள் இல்லாமல் இல்லை. இதுபோன்ற காரியங்கள் அங்கும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் யாரும் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை. இந்த தேர்தல் முக்கியமான நான்கு கட்சிகளுக்குமே ஒரு பலப்பரிட்சை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இத்தேர்தலில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று முழு மூச்சாக பிரச்சாரம் செய்து வருகிறார் ராகுல் காந்தி. இதே போல் பா.ஜ.க. தலைவர் கட்காரியும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்