முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் முதல் கட்ட தேர்தல் அமைதியாக நடந்தது

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

லக்னோ,பிப்.9 - உத்திரப்பிரதேச மாநிலத்தில் நேற்று முதல் கட்டமாக 55 சட்டசபை தொகுதிகளுக்கு அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தது. காலையில் மந்தமாக நடந்த ஓட்டுப்பதிவு பின்னர் விறுவிறுப்படைந்தது. முதல் கட்ட தேர்தலில் 55 சதவீத வாக்குப்பதிவி நடந்துள்ளது. உத்திரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் 403 சட்டசபை தொகுதிகளை கொண்ட 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் 55 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. ஓட்டுப்பதிவு தொடங்கும்போது பலத்த மழை பெய்தது. இதனால் காலையில் ஓட்டுப்பதிவு மந்தமாக இருந்தது. ஒரு சில தொகுதிகளில் 2 மணி நேரம் யாரும் ஓட்டுப்போடவில்லை என்று கூறப்படுகிறது. மழை ஓய்ந்ததும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்படைந்தது. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் மக்கள் ஆர்வமாக வரிசையாக நின்று ஓட்டளித்தனர்.  அதோடுமட்டுமல்லாது ஒரு சில இடங்களை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் ஓட்டுப்பதிவு அமைதியாக நடைபெற்றது. இந்த 55 தொகுதிகளிலும் சுமார் ஒரு கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 796 ஆண் வேட்பாளர்களும் 65 பெண் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சில சரியாக செயல்படவில்லை என்ற புகார்களும் வந்தன. பஹ்ரைச் தொகுதியில் மிக குறைந்த அளவு வாக்குப்பதிவு நடந்துள்ளது. மிஸ்ரிஹ் சட்டசபை தொகுதியில் குலரியா என்ற கிராமத்தில் இருந்த வாக்குச்சாவடியில் சீதாபூர் கிராம மக்கள் ஓட்டுப்போடாமல் புறக்கணித்தனர். மெஹ்நவுன் சட்டசபை தொகுதியை சேர்ந்த ஒரு வாக்குச்சாவடி 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்ததால் சுமார் 800 பேர் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். தேர்தல் பாதுகாப்புக்கு சுமார் 2 லட்சம் போலீசார் அமர்த்தப்பட்டிருந்தனர். பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் எந்த இடத்திலும் அசம்பாவித சம்பவம் நடந்ததாக நேற்று பிற்பகல் வரை தகவல் இல்லை. 

அடுத்து வரும் 11-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. வரும் 15,19,23,28, மற்றும் மார்ச் 3-ம் தேதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மார்ச் மாதம் 6-ம் தேதி நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்