குஜராத் கலவரம்: மோடி அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

அகமதாபாத்.பிப்.9 - குஜராத் கலவரத்தின் போது மெத்தனத்துடனும் அலட்சியத்துடனும் செயல்பட்டதாக நரேந்திர மோடி அரசுக்கு குஜராத் ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2002 ம் ஆண்டு பிப்ரவரி மாத கடைசியில் கோத்ரா என்ற இடத்தில் சபர்மதி ரயில் எரிக்கப்பட்டது.  இதில் 58 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து குஜராத் முழுவதும் வகுப்பு கலவரம் ஏற்பட்டது. இதில் 1000 க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

 இந்த கலவரத்தின் போது ஏராளமான இஸ்லாமிய வழிபாட்டு தலங்களும் இடித்து சேதப்படுத்தப்பட்டன.

சேதம் அடைந்த இஸ்லாமிய வழிபாட்டு தலங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரி குஜராத் ஐகோர்ட்டில் குஜராத் இஸ்லாமிய நிவாரண கமிட்டியினர் மனு தாக்கல் செய்திருந்தனர். 

இந்த மனு மீது விசாரணை நடத்திய குஜராத் ஐகோர்ட்டு தற்காலிக தலைமை நீதிபதி பாஸ்கர் பட்டாச்சார்யா,  நீதிபதி ஜே.பி.  பர்திவாலா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் குஜராத் கலவரத்தில் சேதம் அடைந்த 500 இஸ்லாமிய வழிபாட்டு தலங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க  உத்தரவிட்டது.

மத வழிபாட்டு தலங்களை சேதப்படுத்தும் அளவுக்கு குஜராத் அரசாங்கம் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டு இருக்கிறது என்று  நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இது போன்ற மத வழிபாட்டு தலங்களை சேதப்படுத்துவதை தடுக்க போதுமான நடவடிக்கைகளை குஜராத் அரசு எடுக்கவில்லை என்றும் ஐகோர்ட்டு நீதிபகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இது போன்று சேதப்படுத்தப்பட்ட மத வழிபாட்டு  தலங்களை பழுது பார்த்து கொடுத்தல், மறு கட்டுமானம் செய்து கொடுத்தல் போன்றவற்றுக்கு குஜராத் அரசாங்கமே பொறுப்பு என்றும் நீதிபதிகள்  தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

குஜராத் கலவரத்தின் போது சேதம் அடைந்த வீடுகள், வணிக கட்டிடங்கள் ஆகியவற்றுக்கு நஷ்ட ஈடு வழங்கியதை போல சேதம் அடைந்த மத வழிபாட்டு தலங்களுக்கும் குஜராத் அரசு உரிய நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

குஜராத்தில் உள்ள 26 மாவட்ட நிர்வாகங்களும்  இது போன்று சேதம் அடைந்த வழிபாட்டு தலங்களுக்கு எவ்வளவு நஷ்ட ஈடு வழங்கலாம் என்பதை முடிவு செய்து அதன் விவரங்களை 6 மாதங்களுக்குள் ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள்  தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: