சட்டசபையில் ஆபாச படம் பார்த்த அமைச்சர்கள் ராஜினாமா

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர்,பிப்.9 ​ சட்டசபையில் ஆபாச படம் பார்த்த அமைச்சர்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபையில் நேற்றுமுன்தினம் விவாதம் நடந்துகொண்டியிருந்தபோது 3 அமைச்சர்கள் செல்போனில் ஆபாச படம் பார்த்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காலையில் சட்டசபை கூடியதும் பிஜப்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது பற்றியும் வகுப்புவாத மோதல் பற்றியும் காரசாரமாக விவாதம் நடந்துகொண்டியிருந்தது. அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் சவதி தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டியிருந்தார். பின்னர் அதை மற்றொரு அமைச்சரான சி.சி.பட்டீலிடம் காண்பித்தார். அவரும் அதை ரசித்தார். சட்டசபை நிகழ்ச்சிகளை  தூரதர்ஷனும் மற்றும் தனியார் டெலிவிஷன் சானல்களும் படம் பிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. 2 அமைச்சர்கள் ஆபாச படம் பார்ப்பதை அவர்கள் அப்படியே படம் பிடித்துவிட்டனர். சட்டசபை ஒத்திவைக்கப்பட்ட பின்பு தூர்தர்ஷணம், கன்னட சேனல்களும் சட்டசபை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப செய்தன. அதில் 2 அமைச்சர்கள் செல்போனில் ஆபாச படம் பார்க்கும் காட்சிகள் இருந்ததைப்பார்த்த பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதனை பல்வேறு அமைப்புகளும் எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். 

சட்டசபையின் மாண்பை கெடுத்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. ஆபாசப்படம் பார்த்த அமைச்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா (காங்கிரஸ்) ஐக்கிய ஜனதாதளம் தலைவர் குமாரசாமி ஆகியோர் போர்க்கொடி உயர்த்தினர். ஆபாச படம் பார்த்த அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

இந்த பிரச்சினை பாரதிய ஜனதாவின் டெல்லி மேலிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தை இரவோடு இரவாக பாரதிய ஜனதா தலைவர் நிதீன்கட்காரி விசாரணை நடத்தினார். சம்பந்தப்பட்ட அமைச்சர்களை உடனடியாக ராஜினாமா செய்யும்படியும் உத்தரவிட்டார். இதையடுத்து முதலமைச்சர் சதானந்தா கவுடா நேற்றுக்காலை மாநில பா.ஜ. தலைவர்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் மாநில தலைவர் ஈஸ்வரப்பா, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா ஆகியோரும் கலந்துகொண்டனர். அமைச்சர்கள் ஆபாச படம் பார்த்தது குறித்து ஆலோசிக்கப்பட்ட பின்னர் கட்சி மேலிட உத்தரவை ஏற்று சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் லட்சுமண் சவதி, சி.சி. பட்டீல் மற்றும் இவர்களுக்கு ஆபாச படத்தை செல்போனில் கொடுத்த கிருஷ்ண பால்மர் ஆகியோர்களை நீக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 3 அமைச்சர்களும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். உடனடியாக அவர்கள் முதல் அமைச்சர் சதானந்தா கவுடாவிடம் தங்களுடைய ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். அதை கவர்னர் பர்தவாஜூக்கு அனுப்பி வைத்தார். கவர்னரும் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டதாக கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: