முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் மந்திரிகள் 3 பேரையும் கைது செய்ய ஆர்ப்பாட்டம்

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

பெங்களூரு, பிப்.10 - சட்டசபையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த கர்நாடக முன்னாள் மந்திரிகள் 3 பேரையும் கைது செய்யக்கோரி சட்டசபை வளாகத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கர்நாடக சட்டசபையில் விவாதம் நடந்துகொண்டிருந்தபோது 2 அமைச்சர்கள் செல்போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டசபையில், பிஜப்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது குறித்தும், வகுப்புவாத மோதல்கள் குறித்தும் காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இந்த இரு அமைச்சர்களும் தங்களது செல்போன்களில் ஆபாச படங்களை பார்த்துக்கொண்டிருந்தனர். இதனை தூர்தர்ஷன் மற்றும் தனியார் டெலிவிஷன் சானல்கள் படம்பிடித்துவிட்டனர். சட்டசபை ஒத்திவைக்கப்பட்ட பின் இதனை தூர்தர்ஷனும் தனியார் தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பின. அப்போது இரண்டு அமைச்சர்கள் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்தது தெரிந்தது. இதனால் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. பல்வேறு அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன. ஆபாச படம் பார்த்த அமைச்சர்கள் லட்சுமண் சவதி, சி.சி.பாட்டீல் மற்றும் இவர்களுக்கு ஆபாச படத்தை செல்போனில் கொடுத்த அமைச்சர் கிருஷ்ண பால்மர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து இந்த மூன்று அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதங்களை முதல்வர் சதானந்த கவுடாவிடம் அளித்தனர். முதல்வரும் அதனை ஏற்றுக்கொண்டு அந்த ராஜினாமா கடிதங்களை கவர்னர் பரத்வாஜுக்கு அனுப்பிவைத்தார். கவர்னரும் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டதாக கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்திகள் தெரிவித்தன.

இந்த நிலையில் இந்த 3 முன்னாள் அமைச்சர்களையும் கைது செய்யக்கோரி பெங்களூரில் சட்டசபை வளாகத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த 3 பேரின் எம்.எல்.ஏ. பதவிகளையும் பறிக்க வேண்டும் என்றும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் பரமேஸ்வர் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர். கர்நாடக பா.ஜ.க. அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் இவர்கள் கோஷம்போட்டனர். 

ஆபாசப் படம் பார்த்த 3 முன்னாள் மந்திரிகளின் எம்.எல்.ஏ. பதவிகளை பறிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வரும் நிலையில் அது முடியாது என்றும் கர்நாடக ஆட்சி நிர்வாகம் குறித்து எந்தவிதமான குறைபாடும் இதுவரை இல்லை. தனிப்பட்டவர்களின் செயல்பாடுகள் காரணமாக அரசை டிஸ்மிஸ் செய்ய தேவையில்லை என்றும் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா மறுப்பு தெரிவித்துள்ளார்.  ஆபாசப் படம் பார்த்த 3 முன்னாள் மந்திரிகளையும் கைது செய்யக்கோரி மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று சித்தராமைய்யா, பரமேஸ்வர் ஆகியோர் கூறியுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்