முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ அமைச்சர் நாளை சவூதி அரேபியா பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி. பிப்.12 - ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை சவூதி அரேபியா செல்ல இருக்கிறார். இந்தியாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே  ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான உறவுகளை மேம்படுத்த இரு நாடுகளும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி வருகிற திங்கள் கிழமை ( நாளை ) இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக சவூதி அரேபியா நாட்டுக்கு புறப்பட்டு  செல்கிறார்.

அவருடன் ராணுவ செயலாளர் சசிகாந்த் சர்மா, ராணுவ துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.கே. சிங், கடற்படை துணை தளபதி சதீஷ் சோனி, விமான படை துணை தளபதி எம். ஆர். பவார் ஆகியோரும் சவூதி அரேபியா  செல்கின்றனர்.

சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அந்நாட்டு  ராணுவ அமைச்சர் இளவரசர் சல்மான் - பின் -  அப்துல் அஜீஸ், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளை சந்தித்து பேசுவார்.

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி பரிமாற்றங்கள், கடற்படை கப்பல்கள் விஜயம், ராணுவ உயர் அதிகாரிகள் பரஸ்பர விஜயங்கள், உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இரு நாடுகளின் ராணுவ அமைச்சர்களும் ராணுவ அதிகாரிகளும்  இந்த பயணத்தின் போது விரிவான விவாதம் நடத்துவார்கள்.

ராணுவ புரிந்துணர்வு குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.

மேலும் சவூதி அரேபியாவில் இருக்கும் இந்திய சமுதாயத்தினருடனும் அந்தோணி ஆலோசனை நடத்துவார்.

கடந்த பல ஆண்டுகளாவே இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவ உறவுகள் பலமாக உள்ளன. இந்த உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்த பயணம் அமையும்.

இந்தியாவுக்கு எண்ணை வழங்கும் நாடுகளில் சவூதி அரேபியா மிகப்பெரிய நாடாக இருந்து வருகிறது.

 மேலும் இந்தியாவுடன் அதிகமான வர்த்தகம் வைத்துக்கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாகவும்  சவூதி அரேபியா திகழ்கிறது.

கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாதம் பிரதமர் மன்மோகன் சிங் சவூதி அரேபியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்