ராமேஸ்வரம் கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா துவங்கியது

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

ராமேஸ்வரம், பிப்.- 13 - மாசி மகா சிவராத்திரி திருவிழா ராமேஸ்வரம் கோவிலில் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. புனித தலமான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆடித் திருக்கல்யாணம், தை அமாவாசை, மாசி மகா சிவ ராத்திரி திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாப்படும். அதன்படி மாசி மகா சிவராத்திரி திருவிழாவையொட்டி கோவிலிலன் சுவாமி சன்னதி முன்புள்ள கொடிகம்பத்தில் நேற்று வேதவிற்பன்னர்கள் மந்திரம் முழங்க கொடியேற்றப்பட்டது. அதன்பின்னர் அலங்கரிக்கப்பட்ட சுவாமி, அம்மனுக்கு மஹா தீபாரதனை நடைபெற்றது. இதில் கோவில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், தக்கார் குமரன் சேதுபதி, ராமேஸ்வரம் நகராட்சித்தலைவர் அர்ச்சுணன், கோவில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், மேலாளர்(பொறுப்பு) கக்காரின், கோவில் கண்காணிப்பாளர் வெங்கட்ராமன், பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளீதரன், ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி செயலர் ராமமூர்த்தி உள்ளிட்ட பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.இதனையடுத்து நேற்று இரவில் சுவாமி தங்க நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்மன் வெள்ளி வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் வருகிற 20ம் தேதி மாசி மகா சிவராத்திரி முன்னிட்டு காலையில் சுவாமி, அம்மன் மாசி தேரிலும், இரவில் மின் அலங்காரத்துடன் கூடிய வெள்ளி ரதத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சியும், 21 ம் தேதி மாசி மறை நிலா ( மாசி அமாவாசை ) யொட்டி சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அக்னி தீர்த்த கடலில் தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 12 நாட்கள் மாசி திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளிலும் சுவாமி, அம்மன் தங்கம்,வெள்ளி வாகனத்தில் வீதிஉலா நிகழ்ச்சியும், கோவில் நந்தவன கலையரங்கில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: