முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கத்தில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உற்சாக வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

திருவானைக்காவல், பிப்.ஞு- 14:-  திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் நேற்று நடைபெற்ற  அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா தேசிய சட்டப்பள்ளி உள்ளிட்ட  பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தும் மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசினார்.. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 3வது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார்.  தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு சென்று அங்கு 3 நாட்கள் முகாமிட்டு தொகுதி மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வைக்கும் வகையில் அரசின் பல நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஒரு சில திட்டங்களை தொடங்கி வைத்து மக்களுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார். குறிப்பாக பக்தர்களுக்கான தங்கும் விடுதி, புதிய துணை மின் நிலையங்கள், மகளிர் தோட்டக்கலை கல்லூரி உள்ளிட்ட சுமார் 700 கோடி ரூபாய்க்கான பல்வேறு திட்டங்களுக்கு கடந்த முறை முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.  சுமார் 7 மாதங்களுக்கு பிறகு தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு நேற்று மீண்டும் வருகைத் தந்து முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ஏழை எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசுகிறார்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக நேற்று பகல் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் திருச்சி புறப்பட்டார்.சென்னை விமான நிலையத்தில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் இ.மதுசூதனன், சுலோச்சனா சம்பத், முன்னாள் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், தளவாய் சுந்தரம் மற்றும் சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்.பி., வி.சோமசுந்தரம் எம்எல்ஏ, காஞ்சி மாவட்ட ஊராட்சிக்கு குழு தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், கே.குப்பன் எம்எல்ஏ, ஆதிராஜாராம், சைதை பாபு, வேளச்சேரி முருகன், மதுரவாயல் ஜெயபிரபா, பல்லாவரம் வீரா உள்ளிட்ட ஏராளமான அதிமுக மாநில, மாவட்ட, பகுதி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

திருச்சி விமான நிலையம் வந்தடைந்த முதல்வரை  மாவட்ட கலெக்டர், அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள், அதிமுக நிர்வாகிகள்,  தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அங்கிருந்து கார் மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவானைக்காவலில் அமைக்கப் பட்டுள்ள விழா மேடைக்கு சென்றார்.

திருவானைக்காவல் வடக்கு உள்வீதியில் அரசு நலத்திட்ட விழாவிற்கான விசேஷ மேடை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு முதலமைச்சர் ஜெயலலிதா வருகை தந்தபோது கூடியிருந்த பொதுமக்களும், அதிமுகவினரும் உற்சாகத்துடன் வரவேற்பு முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் அமைய உள்ள தேசிய சட்டப் பள்ளி எனும் புதிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இது தவிர திருச்சிகுழுமணி, திருச்சிஜீயபுரம் சாலையை மேம்படுத்தும் பணிகள் மேலும் அப்பகுதியில் அமைய உள்ள இரண்டு சிறு பாலங்கள் கட்டுவதற்குரிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பேட்டைவாய்தலை கிளை மற்றும் ஸ்ரீரங்கம் நகர  கூட்டுறவு வங்கி ஆகிய வங்கிகளில் குளிர்சாதன வசதிகளுடன் நவீனமயப்படுத்தப்பட்டதை திறந்து வைத்தார்.  இது தவிர ஏற்கனவே முடிவுற்ற பல்வேறு அரசு நலத்திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைத்து பல்வேறு பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கி பேசினார்.

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வருகைத் தந்த ஜெயலலிதாவை வரவேற்க அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.  விழாவில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத் துறை உயரதிகாரிகள்,அதிமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

விமான நிலையத்திலிருந்து விழா நடைபெறும் மேடை வரையிலும் ஏராளமான கொடி, தோரணங்களும் வரவேற்பு பேனர்களும் கட்டப் பட்டிருந்தன. ஆங்காங்கே சிறிய மேடைகள் அமைத்து இசை நிகழ்ச்சிகளும், கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பேண்டு வாத்தியம், செண்டை மேளம் நாதஸ்வர இசை முழங்க  பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் முதல்வருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்