முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவையில் காதல் ஜோடிக்கு கட்டாய திருமணம் இந்து முன்னணியினர் கைது

புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

புதுச்சேரி, பிப்.- 15 - உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது.  புதுவையில் காதலர் தினம் கொண்டாட இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. யாராவது இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்போம் என்று அவர்கள் அறிவித்து இருந்தனர்.  இந்த நிலையில் புதுவையில் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதல் ஜோடிகள் புதுவை பாரதி பூங்கா, கடற்கரை பகுதியில் கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதை கண்காணிப்பதற்காக இந்து முன்னணி தலைவர் சனில்குமார், பொதுச்செயலாளர் முருகையன் தலைமையில் மோட்டார் சைக்கிளில் ஆங்காங்கு சென்றனர். அப்போது பாரதி பூங்காவில் சில காதல் ஜோடிகள் அமர்ந்து இருந்ததை அவர்கள் பார்த்தனர். அவர்களிடம் சென்ற இந்து முன்னணியினர் நீங்கள் காதல் ஜோடிகளா? என்று கேட்டனர்.  அதற்கு சிலர் நாங்கள் காதல் ஜோடிகள் இல்லை என்று கூறி விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.  ஆனால் ஒரு காதல் ஜோடி நாங்கள் காதலர்கள் தான் என்று கூறியது. காதலன் பெயர் வடிவேலு என்றும், ஊர் சண்முகாபுரம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும்  காதலி பெயர் உமாமகேஸ்வரி என்றும், ஊர் பெயர் குரும்பாபேட் என்றும் கூறினார்.  அப்படியானால் தாலி கட்டிக்கொண்டு காதலியுங்கள் என்று இந்து முன்னணியினர் கூறினர்.  உடனே காதலர் வடிவேலு, இந்து முன்னணியினர் வைத்திருந்த தாலியை வாங்கி தனது காதலி உமாமகேஸ்வரிக்கு கழுத்தில் கட்டினார். அந்த காதல் ஜோடிக்கு இந்து முன்னணி தலைவர் சனில்குமார் ரூ.1001 அன்பளிப்பு அளித்தார். இதையடுத்து அந்த காதல் ஜோடியினர் அங்கிருந்து சென்று விட்டனர்.  காதலர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட தகவல் பெரியக்கடை போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் பாரதி பூங்காவிற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பாரதி பூங்காவில் இருந்து புதுவை மாநில இந்து முன்னணி தலைவர் சனில்குமார், பொதுச்செயலாளர் முருகையன் உள்பட 9 பேரை கைது செய்தனர். காதல் ஜோடிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் நேற்று பாரதி பூங்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  பொதுவாக புதுவையில் காதல் ஜோடிகள் தாவரவியல் பூங்காவில் கூடுவது வழக்கம். ஆனால் புயலில் பாதிக்கப்பட்ட தாவரவியல் பூங்கா மூடப்பட்டது. இதனால் மற்ற இடங்களில் காதல் ஜோடிகள் கூடி காதலர் தினத்தை கொண்டாடினர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்