முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் காந்த வெடிகுண்டு தாக்குதலில் மர்மம் நீடிப்பு

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, பிப்.- 16 - டெல்லியில் இஸ்ரேல் தூதுரக அதிகாரியின் கார் மீது நடத்திய காந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் எந்த தீவிரவாத இயக்கம் இதில் ஈடுபட்டது என்பது மர்மமாகவே உள்ளது. இந்த சம்பவம் குறித்து இன்னும் துப்பு துலங்கவில்லை. டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றும் டால்யெஹொ சுவா(40). இவர் தூதரக காரில் பிரதமர் இல்லம் அமைந்துள்ள சாலை வழியாக சென்றார். அப்பகுதியில் உள்ள சிக்னலில் கார் நின்று கிளம்பிய போது இந்த காரில் குண்டு வெடித்தது. கார் சிக்னலில் நின்றிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் காந்த வெடிகுண்டை காரில் பொருத்தியுள்ளனர். அது வெடித்ததில் கார் பலத்த சேதம் ஏற்பட்டு தூதரக அதிகாரி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பயங்கரவாத பின்னணி இருப்பதாக உள்துறை அமைச்சகம் சந்தேகிக்கிறது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தை தேசிய புலனாய்வு அமைப்பினர் ஆய்வு செய்ததில் அந்த இடத்தில் காந்த துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. செங்கல் அளவு கொண்ட வெடிகுண்டு காந்தத்தின் மூலம் கார் செல்லும் போதே ஒட்ட வைக்கப்பட்டு கடிகாரம் மூலம் இந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்திருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வெடிகுண்டில் ஆர்.டி.எக்ஸ் பயன்படுத்தப்படவில்லை. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீவிரவாதிகள் வெடிக்கச் செய்துள்ளனர் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நம்புகின்றனர். குண்டு வெடிப்பு நடந்த இடத்தின் அருகே உள்ள தொழில் அதிபர் ஒருவரின் வீட்டு வாசலில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தூதரக பெண் அதிகாரியின் காரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 பேர் ஹெல்மட் அணிந்தபடி வருவதும், சிக்னலில் காருக்கு பின்னால் நெருங்கியபடி நிற்பதும் அவர்களில் ஒருவன் காரில் ஏதோ ஒரு பொருளை வைப்பது போன்ற காட்சிகள் மட்டுமே பதிவாகி இருந்தன. மோட்டார் சைக்கிளின் பதிவு எண் பதிவாகவில்லை. எனவே மோட்டார் சைக்கிளை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் கூறுகையில், இந்த தாக்குதலை நடத்தியவன் நன்கு பயிற்சி பெற்றவன். இஸ்ரேல் பெண் அதிகாரியை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே தீவிரவாத தாக்குதல் என்னும் அடிப்படையில் இது அணுகப்படும். இந்த தாக்குதலை கண்டிக்கும் அதே சமயம் எந்த அமைப்பையும் பழி சுமத்த நான் விரும்பவில்லை. என்றார்.

இந்நிலையில் டெல்லி குண்டு வெடிப்பு நடந்த அதே சமயத்தில் ஐரோப்பாவின் ஜார்ஜியாவில் தப்லிசி என்ற பகுதியில் உள்ள தூதரகம் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. எனவே இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக நடந்த தாக்குதலாகவே இது கருதப்படுகிறது. இந்த இரு சம்பவங்களுக்கும் ஈரான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத  இயக்கம் தான் காரணம் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் மகாமை என்ற பகுதியில் வசித்த செய்யதுமொராபி என்பவன்தான் இந்த குண்டுகளை வெடிக்கச் செய்தவன். ஜியார்ஜியா மற்றும் தாய்லாந்து நாட்டில்  நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே அந்த கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லி குண்டு வெடிப்பை நிகழ்த்தியது இந்த தீவிரவாத இயக்கம் தான் என்ற முடிவுக்கு வர எந்தவித ஆதாரங்களோ, தடயங்களோ இன்னும் சிக்கவில்லை. துப்பு துலங்கவில்லை. புலனாவுய்வு பிரிவினரும், டெல்லி போலீசாரும் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். 

மேலும் இஸ்ரேல் நாட்டில் இருந்து சிறப்பு புலனாய்வு குழு ஒன்று இந்தியாவிற்கு வருகிறது. இந்த குழுவில் 3 நிபுணர்கள்  உள்ளனர். புலனாய்வு செய்வதில் முதலிடத்தில் உள்ள இஸ்ரேல் குழுவின் விசாரணை துப்புதுலக்க உதவியாக இருக்கும் என்று டெல்லி போலீசார் கூறினர்.

காந்த வெடிகுண்டு இந்தியாவிற்கு புதிதாகும். எனினும் ஈரானிலும், ஈராக்கிலும் இது பரவலாக பயன்படுத்தக்கூடியது ஆகும். அரபு நாடுகளில் ஒவ்வாலசிகா என்று அழைக்கப்படும் இந்த காந்த வெடிகுண்டு தீவிரவாதிகளுக்கு பிடித்த ஆயுதமாகும். எனவே தான் டெல்லி காந்த குண்டுவெடிப்பில் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. இந்தியாவில் முன்பு இந்த விதமான காந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது இல்லை என்பதால் இந்திய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வதில் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்