முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் சுட்டுக்கொலை: மாலுமிகளிடம் விசாரணை

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

கொல்லம், பிப்.17 - தமிழக மீனவர்கள் 2 பேர் இத்தாலிய கப்பல் பாதுகாப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இத்தாலி கப்பல் பணியாளர்களிடம் துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களான ராமன்துறை, இரயுமன்துறை, பூத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கேரள கடலில் மீன்பிடித் தொழில் செய்வது வழக்கம். இதேபோல பூத்துறையை சேர்ந்த பிரடி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த அஜீஸ்டிங்கு, கிலாரி, ஜான்சன், அலெக்சாண்டர்,  பிரான்சிஸ், முத்தப்பன், பிங்செரியன், மார்ட்டின், ஆன்டனி, குளச்சலை சேர்ந்த ஜெலஸ்டின் ஆகியோரும் கேரளாவைச் சேர்ந்த சில மீனவர்களும் இணைந்து கொல்லம் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர். 

நேற்று முன்தினம் ஆழ்கடல் பகுதியில் இவர்கள் வலைகளை வீசி மீன்பிடிக்கக் காத்திருந்தபோது சரக்கு கப்பல் ஒன்று அந்த வழியாக வந்தது. திடீரென அந்த கப்பலில் இருந்தவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் படகின் மேல்பகுதியில் நின்றுகொண்டிருந்த அஜீஸ்டிங்கு, ஜெலஸ்டின் ஆகியோர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. அவர்கள் அலறிக்கொண்டே விழுந்து அந்த இடத்திலேயே  பரிதாபமாக இறந்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு படகின் கீழ்தளத்தில் இருந்தவர்கள்  மேலே ஓடிவந்து பார்த்தபோது அஜீஸ்டிங்குவும், ஜெலஸ்டினும் இறந்து கிடந்தனர்.  இந்த நேரத்தில் இவர்களை சுட்டவர்கள் வந்த கப்பல் அந்த இடத்தை விட்டு விரைவாக செல்ல ஆரம்பித்தது. படகில் வந்தவர்கள் இதுபற்றி பூத்துறையில் உள்ள உறவினர்களுக்கும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் கொல்லம் மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

உடனடியாக கடலோர காவல்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் விரைந்து செயல்பட்டு தப்பிச் சென்ற கப்பலை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அந்த கப்பல் கொச்சி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு கப்பல் சிப்பந்திகளிடம் துறைமுக அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கப்பல் இத்தாலியைச் சேர்ந்தது என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் படகில் இருந்தவர்களை தீவிரவாதிகள் என்று தவறாக கருதி சுட்டுவிட்டதாக இத்தாலி கப்பலின் மாலுமிகள் தெரிவித்தனர். இருந்தாலும் இதுகுறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  

தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது கன்னியாகுமரி பகுதி மீனவர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட அஜீஸ்டிங்குவிற்கு இன்னும் திருமணமாகவில்லை. இவருக்கு இரண்டு சகோதரிகள் மட்டுமே உள்ளனர். இறந்த மற்றொரு மீனவரான குளச்சலைச் சேர்ந்த ஜெலஸ்டின் தற்போது  கேரளாவில் வசித்து வருகிறார். மீனவர்கள் நடுக்கடலில் சுடப்பட்ட சம்பவம்  தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்