முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆ. ராசாவின் பினாமி சாதிக்பாட்சாவின் சாவில் நீடிக்கும் மர்ம முடிச்சுகள்

திங்கட்கிழமை, 21 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மார்ச்.- 21 - ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி கைதாகி சிறையில் இருக்கும் மாஜி தி.மு.க. மந்திரி ஆ. ராசாவின் பினாமியான சாதிக்பாட்சாவின் சாவில் பல மர்மங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. இறந்தது சாதிக்பாட்சா தானா என்ற கேள்வியையும் சிலர் எழுப்புகிறார்கள்.  ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி பின்னர் கைதாகி, தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் ராசா. அவரது காவல் நீடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இவரது வர்த்தக கூட்டாளிதான் சாதிக்பாட்சா. சாதிக்பாட்சாவுக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட மத்திய புலனாய்வுத் துறை அவரையும் விசாரணை என்ற வளையத்துக்குள் கொண்டு வந்தது. சி.பி.ஐ. அவரிடம் விசாரணை நடத்திய பிறகு எனக்கு தெரிந்த விவரங்கள் எல்லாவற்றையும் சொல்லி விட்டேன். என் மீது எந்த தவறும் இல்லை என்று மீடியாக்களிடம் தெரிவித்தார் சாதிக்பாட்சா. ஆனாலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் முக்கிய தடயங்கள் சி.பி.ஐயின் கையில் சிக்கியிருப்பதால் சாதிக்பாட்சா எந்த நேரத்திலும் அப்ரூவராக மாறுவார் என்ற பேச்சு அடிபட்ட போது பரபரப்பு கிளம்பியது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அலைக்கற்றையை போலவே கண்ணுக்கு தெரியாமல் காற்றில் போய் விட்டது ராசாவின் நண்பரான சாதிக்பாட்சாவின் உயிர். கடந்த 16 ம் தேதி திடீரென மரணத்தை தழுவிக் கொண்டார் சாதிக் பாட்சா. அன்றைய தினம் டெல்லி செல்வதற்காக விமான டிக்கெட் எடுத்து வைத்திருந்தாராம் சாதிக். ஆனால் புறப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார் சாதிக்பாட்சா. இந்த சாவில்தான் பல மர்மங்கள் நீடிக்கின்றன. 

கரூர் மாவட்டம் பள்ளபட்டிதான் சாதிக்கின் சொந்த ஊர். ஆரம்பத்தில் பாய் விற்கும் தொழில் செய்து வந்த இவருக்கு ஆ. ராசாவின் அறிமுகம் கிடைத்த பிறகு அசுர வளர்ச்சி ஏற்பட்டது. சென்னை, கோவை, பெங்களூர் என்று நாடு முழுவதும் பரந்து விரிந்தது சாதிக்கின் வர்த்தக சாம்ராஜ்யம். கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற சாதிக்பாட்சா நடத்திய ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஆ. ராசாவின் மனைவி பரமேஸ்வரி முக்கிய பொறுப்பில் இருந்திருக்கிறார். நினைத்த நேரத்தில் காவல் துறையின் உயரதிகாரிகளையும், இன்னும் சொல்லப் போனால் முதல்வரின் குடும்ப உறுப்பினர்களையும் கூட சந்திக்கும் அளவுக்கு மிகுந்த செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தாராம் சாதிக். 

ஆனால் ராசாவின் கைதுக்குப் பிறகு நிலைமை அடியோடு மாறியது. சி.பி.ஐ. விசாரணை அடுத்தடுத்து நெருக்க என்ன செய்வது என்று தெரியாமல் சில வி.ஐ.பி. க்களை சந்திக்க முயற்சி செய்திருக்கிறார் சாதிக். ஆனால் அதற்கு பலன் கிட்டவில்லை. பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு எப்படியோ ஒரு வி.ஐ.பியை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, எங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த நினைத்தால் .... நீ நல்லா இருக்க முடியாது என்று எதிர்முனையில் இருந்து மிரட்டல் வந்ததாம். அதனால் கடுமையான மனக்குழப்பத்தில் இருந்திருக்கிறார் சாதிக். இந்த சூழ்நிலையில்தான் சில தினங்களுக்கு முன்பு மொரீசியஸ் உட்பட சில நாடுகளில் ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் முதலீடு செய்யப்பட்ட விவகாரத்தை புலனாய்வுத் துறை கண்டுபிடித்தது. 

அந்த நாட்டு அரசுகளுக்கு மேலும் பல விவரங்களை தரும்படி கடிதங்கள் அனுப்பப்பட்டன. அமலாக்கத்துறை மூலமும் கடிதம் போனது. இது தவிர, இந்தியாவில் சுமார் 800 கோடி அளவுக்கு சாதிக்பாட்சா பெயரில் இருந்த சில சொத்துக்களின் விவரங்களையும் தோண்டியெடுத்த மத்திய புலனாய்வுத் துறை அது பற்றிய அடுக்கடுக்கான கேள்விகளுடன் விசாரணைக்காக நாள் குறித்து வைத்திருந்தது. அதன் காரணமாக இனி தப்பிக்கவே முடியாது என்பதை தெரிந்து கொண்ட சாதிக்பாட்சா, பேசாமல் அப்ரூவராக மாறி நடந்த உண்மைகளை சொல்லி விடலாம் என்ற மன நிலைக்கு வந்ததாகவும் பலமான பேச்சு அடிபட்டது.

சாதிக் அப்ரூவர் ஆகலாம் என்ற செய்தி கசிந்ததுமே பல்வேறு மட்டங்களில் இருந்தும் அவருக்கு மிரட்டல்கள் வந்ததாம். இந்த மிரட்டலால் மேலும் அரண்டு போன சாதிக்பாட்சா எங்கும் வெளியில் செல்லாமல் கடந்த 2 வாரங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாராம். தூக்கில் தொங்கிய 16 ம் தேதி காலை சுமார் 7.30 மணிக்கு அவருக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவரிடம் இருந்து போன் வந்ததாம். கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கும் மேலாக அவர்களிடையே உரையாடல் நீடித்திருக்கிறது. 

எதிர்முனையில் இருந்த அந்த குரலில் இருந்த கோபம் சாதிக்கை மிகவும் துவள வைத்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாமல் குடும்பத்தில் சகஜமாக நடந்து வந்திருக்கிறார் சாதிக். ஒரு கட்டத்தில் தனது மனைவியிடம் நான் சிறைக்குப் போய் விட்டால் குழந்தைகளை நல்ல படியாக பார்த்துக் கொள் என்று கண்கலங்கி சொன்னாராம் சாதிக்பாட்சா. அவரது மனைவி தன் மகனை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக வெளியில் சென்றார். 

பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பிய போது மாடியில் உள்ள படுக்கை அறையில் குழந்தைக்காக கட்டப்பட்டிருந்த தொட்டில் கயிற்றை போட்டு பிணமாக தொங்கினாராம் சாதிக்பாட்சா. அடுத்த சில விநாடிகளில் சாதிக்கின் மர்ம சாவு பற்றிய செய்தி காட்டுத்தீ போல் பரவவே இது தற்கொலை அல்ல திட்டமிட்ட கொலை என்ற கோணத்தில் மீடியாக்களில் அனல் பறந்தது. பிற்பகல் 3 மணியளவில் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சாதிக் உடல் கொண்டு வரப்பட்ட போது அவரது முகம் கூட தெரியாத படி மொத்த உடலையும் போலீசார் வெள்ளைத் துணியால் மூடி மறைத்திருந்தனர். சாதிக்கின் மனைவி ரஹெனா பானு உட்பட உறவினர்கள் யாருமே அங்கு வரவில்லை. போலீஸ் தரப்பில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் அன்று முழுவதுமே சாதிக்கின் குடும்ப உறுப்பினர்கள் மொத்த பேரும் போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் சொல்கிறார்கள். 

ஆனால் அன்று மாலையில் திடீரென தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்த சாதிக்பாட்சாவின் மனைவி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மன உளச்சலையில் இருந்த தன் கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சிலரது வழிகாட்டுதலின் பேரில் அவசர அவசரமாக ஒரு வாக்குமூலம் கொடுத்தாராம். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் சாதிக் என்பதால் இந்த வழக்கை உடனடியாக சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது தமிழக அரசு. இதனால் மறுநாள் காலையில் நடந்த பிரேத பரிசோதனை சி.பி.ஐ. அதிகாரிகளின் முன்னிலையிலேயே நடந்ததாம். அனைத்தும் வீடியோவாகவும் எடுக்கப்பட்டதாம். 

சாதிக்பாட்சாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டரிடம் நிருபர்கள் ஒரு கேள்வி கேட்ட போது, இறந்தது சாதிக்பாட்சா தானா என்பது எனக்கு தெரியாது. என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு டெட்பாடி. அவ்வளவுதான் என்று அவர் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதன் மூலம் இறந்தது சாதிக்தானா என்ற சந்தேகமும் தற்போது பரவலாக எழுந்துள்ளது. சாதிக்பாட்சாவின் நீண்ட கால நண்பரிடம் இது பற்றி கேட்ட போது, தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவர் கோழையல்ல என்று தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

இந்த நிலையில் சாதிக் எழுதிய 4 கடிதங்கள் போலீஸ் வசம் சிக்கியுள்ளதாக தெரிகிறது. ஆனால் அந்த கடிதங்களில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் என்ன என்பதுதான் புதிராக உள்ளது. ஒன்று மட்டும் உறுதி. பல்வேறு இடங்களில் இருந்து அவருக்கு மிரட்டல்கள் வந்திருக்கிறது. நம்பியோர்கள் எல்லாம் தன்னை நட்டாற்றில் விட்டு விட்டதாக அவர் புலம்பியதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எப்படியோ அலைக்கற்றை ஊழலில் சிக்கிய சாதிக்கின் உயிர் அலைக்கற்றை போலவே மாயமாகிப் போனதுதான் வேதனைக்குரிய விஷயம். 

இதனிடையே சாதிக்கின் மரணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் இது குறித்து பேட்டியளித்த சுப்பிரமணிய சுவாமி கூறுகையில், நான் ஏற்கனவே சொன்னேன். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய பலருக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை. அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டிருந்தேன். சாதிக்கின் இந்த மரணம் குறித்து கோர்ட்டின் கவனத்துக்கு எடுத்துச் செல்வேன் என்று கூறினார். சுப்பிரமணிய சுவாமி கூறுவதிலும் உண்மை இருக்கிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் அவர்களை உடனே கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களது உயிருக்கு பாதுகாப்பு இருக்காது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்