முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாள் பயணமாக ஆப்கன் அதிபர் கர்சாய் பாக்.சென்றார்

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், பிப்.- 18 - முத்தரப்பு கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றடைந்தார்.  தீவிரவாதத்திற்கு எதிரான போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் பிரச்சனையில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தான் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் எதிர்ப்பை பெற்றுள்ள ஈரான் ஆகிய மூன்று நாடுகளின் முத்தரப்பு கூட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இந்த 3 நாடுகளின் பாதுகாப்பு அம்சங்கள், இயற்கை எரிவாயு குழாய் அமைத்தல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய் நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. முத்தரப்பு கூட்டத்தில் பங்கேற்பது மட்டுமல்லாமல் இரு நாட்டு உறவு குறித்த முக்கிய கூட்டத்திலும் ஹமீது கர்சாய் கலந்துகொள்கிறார். ஹமீது கர்சாயுடன் ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ தலைமை தளபதி ஆகியோரும் இஸ்லாமாபாத் வந்துள்ளனர். பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, பிரதமர் யூசுப்ரசா கிலானி ஆகியோரை கர்சாய் சந்தித்து பேச இருக்கிறார். பாகிஸ்தான் தரப்பில் அந்நாட்டு ராணுவ தளபதி அஸ்பக் பர்வேஷ் கயானி, ராணுவ அமைச்சர் செளதாரி அஹமது, வெளியுறவுத்துறை அமைச்சர் ஹீனாகர், உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் ஆகியோர் பங்கேற்கிறார்கள். ஈரான் அதிபர் முஹமது அகமதி நிஜார் நேற்று மாலை இஸ்லாமாபாத் வந்துசேர்ந்தார். 3 நாடுகளின் உச்சி மாநாடு இன்று இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony