முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கறுப்புப் பண விசாரணை துரிதப் படுத்தப்படும்: நீதிபதி ஷா

புதன்கிழமை, 28 மே 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.29 - கறுப்புப் பண விவகாரம் தொடர்பான விசாரணை துரிதப்படுத்தப்படும் என சிறப்பு விசாரணைக்குழு தலைவர் எம்.பி.ஷா தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினை சிக்கலானதாக இருந்தாலும் அதை சிறப்பாக கையாள்வோம் என்றார்.

கறுப்புப் பண விவகாரத்தைக் கண்டுபிடித்து விசாரிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் சிறப்பு விசாரணைக்குழுவை மோடி அரசு நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) அமைத்தது.

இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசியில் பேட்டியளித்த நீதிபதி எம்.பி.ஷா கூறுகையில், "கறுப்புப் பண விவகாரத்தில் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எந்த மாதிரியான சவால்கள் என்பதை இப்போதைக்கு கூற முடியாது.

இருப்பினும், எத்தகைய சிக்கலாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக விசாரணையை முடித்துவிடுவோம்.

நான் ஒடிசா, கோவா மாநிலங்களில் சட்டவிரோத சுரங்கம் குறித்த விசாரணை கமிஷனுக்கு தலைவராக இருந்தேன். அப்போது, முதல் இடைக்கால அறிக்கையை இரண்டே மாதங்களில் தாக்கல் செய்தேன். எனவே கறுப்புப் பண விசாரணை அறிக்கையையும் விரைவில் தாக்கல் செய்வேன் என நம்புகிறேன்" என்றார்.

கறுப்புப் பண விவகாரத்தில் தொடர்புடைய பெரும் புள்ளிகளை எப்படிக் கையாள்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "விசாரணையின் போது, வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் நபர்கள் அரசியல்வாதிகளாகவோ அல்லது கார்ப்பரேட் பிரமுகர்களாக இருந்தாலோ அவர்களிடம் கடுமையாகவே நடந்து கொள்வேன்.

நான், 15 ஆண்டுகளாக உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 5 ஆண்டுகள் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்திருக்கிறேன். எந்த ஒரு பெரும்புள்ளியையும் சட்டை செய்தது இல்லை. என்னை சீண்டவும் யாரும் துணிந்ததில்லை" என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்