முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 நாளில் டீசல் விலை உயர்வா? வாசன் கண்டனம்

திங்கட்கிழமை, 2 ஜூன் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன். 3 - முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:_ கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கச்சா எண்ணை விலை ஏறும் போது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது.

அதே போல சர்வதேச சந்தையில் விலை இறங்கும் போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டது. அப்போதெல்லாம் விலை ஏற்றத்தை எதிர்த்து பாரதீய ஜனதா கட்சி குரல் கொடுத்தது மட்டுமல்லாமல் தேர்தல் பிரசாரத்தின் போது விலைவாசியை கட்டுப்படுத்துவோம் என்றும், குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவோம் என்று கூறிய பாரதீய ஜனதா கட்சி பதவி ஏற்ற 6 நாட்களிலே டீசல் விலையை 50 பைசா உயர்த்தியிருக்கிறார்கள். இது சாதாரண மக்களை பாதிப்பதோடு, விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும். எனவே மத்திய அரசு இந்த விலையேற்றத்தை மக்கள் நலன் கருதி மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

கச்சத்தீவு_தலைமன்னாருக்கு இடையே மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்களின் வலையை அறுத்தும், மீனவர்களை தாக்கியும், 33 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. சமீபத்தில் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட இலங்கை அதிபர் இலங்கைக்கு சென்றதும் தன்னுடைய சுயரூபத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.

மத்திய அரசு உடனடியாக கைது செய்ப்பட்ட மீனவர்களை விடுவிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். மேலும் இரு நாட்டு மீனவர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்