முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொது பட்ஜெட்: நாளை நிதியமைச்சர்கள் கூட்டம்

சனிக்கிழமை, 7 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன் 8 - மத்திய பொது பட்ஜெட் தொடர்பாக மாநில நிதியமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நாளை 9ம் தேதி டெல்லியில் ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி விவகாரம் குறித்தும் அவர் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. 

பொது பட்ஜெட்டை அடுத்த மாதம் அருண்ஜெட்லி தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பல்வேறு தரப்பினரிடம் ஜெட்லி கருத்துக்களை கேட்டு வருகிறார். முதலில் வேளாண்துறையை சேர்ந்தவர்களிடம் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து மத்திய தொழிற் சங்க பிரதிநிதிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார். இதில் பாரதீய மஸ்தூர் சங்கம், ஐஎன்டியூசி, ஏஐடியூசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது சில்லரை வணிகம், பாதுகாப்பு, ரயில்வே, தொலை தொடர்பு, கல்வி, சுகாதாரம், ஊடகம் ஆகிய துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கூடாது. பொதுத்துறை நிறுவனங்களை மேம்படுத்தி விரிவுபடுத்த வேண்டும். லாபத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யகூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். முன்பேர வர்த்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும். வருமான வரி உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும். 7வது ஊதிய ஆணையத்துக்கு தேவையான நிதி ஒதுக்கீடு அளிக்க வேண்டும். கட்டமைப்பு துறையில் முதலீட்டை அதிகரித்து வேலைவாய்ப்புகளை பெருக்க வேண்டும். பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு தொழிற்சங்கங்களின் ஆலோசனைகளை பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.

இந்த கூட்டத்திற்கு பிறகு நிதியமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் 10 முக்கிய கோரிக்கைகளை நிதியமைச்சகம் பரிசீலிக்கும். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த திறமை மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மசோதாவுக்கு சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் காரணமாக இந்த வரி விதிப்பு மசோதா நிறைவேற்றப்படாமல் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மாநில அரசுகளின் சந்தேகங்களுக்கு தீர்வு காணப்பட்டு சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மசோதா நிறைவேற்றப்படும் என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்