முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.,கில் ஆளில்லா விமான தாக்குதல்: 6 தீவிரவாதிகள் பலி

வியாழக்கிழமை, 12 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

பெஷாவர், ஜூன் 13 - பாகிஸ்தானின் பழங்குடியின பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 

பாகிஸ்தானில் தெஹ்ரிக் இ தலிபான் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் பழங்குடி பகுதியான வடக்கு வஜ்ரிஸ்தானில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சமீப காலமாக தலிபான் இயக்கத்தை சேர்ந்த தற்கொலை படை தீவிரவாதிகள் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிறன்று இரவு பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையம் மீது தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் அவர்கள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் உட்பட 29 பேர் பலியானார்கள். 

கராச்சி விமான நிலைய தாக்குதல் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் பாகிஸ்தானுக்கு விமானங்களை இயக்க வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தயக்க காட்ட தொடங்கின. இந்நிலையில் பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை அடக்குவதற்காக வடக்கு வஜ்ரிஸ்தானில் உள்ள தர்கா மண்டி பகுதியில் நேற்று முன்தினம்  அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியது. 4 ஏவுகணைகள் வீசியதில் அங்கிருந்த ஏராளமான வாகனங்களும் தலிபான் முகாம்களும் முற்றிலும் அழிந்தன. மேலும் 6 தீவிரவாதிகள் பலியானதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் நடத்திய வான்வழி தாக்குதலில் 3 தலிபான் தீவிரவாதிகள் பலியானார்கள். அதன் பிறகு தலிபான்களுடன் அரசு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. இந்த ஆண்டு முதல் முறையாக அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கிடையில் தெஹ்ரிக் இ தலிபான் தீவிரவாத இயக்கத்தினருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் அரசு முன்வர வேண்டும் என்று அந்நாட்டு ராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்